model image freepik
உலகம்

இரவு 11மணிக்கு கழிப்பறை சென்ற மாணவர்|விநோத தண்டனை வழங்கிய விடுதி நிர்வாகம்.. ஆக்‌ஷன் எடுத்த சீன அரசு

சீனாவில் உள்ள உறைவிடப் பள்ளி விடுதி ஒன்று, இரவில் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்காக ஒரு மாணவனை ஊழியர்கள் தண்டித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

Prakash J

சீனாவில் உள்ள உறைவிடப் பள்ளி விடுதி ஒன்று, இரவு 10.45 மணிக்குமேல் மாணவர்கள் வெளியில் செல்லக் கட்டுப்பாடுகள் விதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதையும் மீறி மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விடுதியில் படித்து வந்த மாணவர் ஒருவர், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கோராமல் இரவு 11 மணியளவில், பள்ளிக்கு வெளியே இருந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார். இரவில் வெளியே சென்ற மாணவரைக் கண்ட விடுதி நிர்வாகம், அவரை அழைத்துக் கண்டித்துள்ளது. மேலும், அவரை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னதுடன், அதை மற்ற மாணவர்களிடத்தில்ரும் விநியோக்க உத்தரவிட்டுள்ளது.

model image

அதன்படி, ”நான் பள்ளி விதிகளை கடுமையாக மீறிவிட்டேன். மாலையில் கழிப்பறைக்குச் செல்வது மற்ற மாணவர்களின் தூக்கத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், எனது வகுப்பிற்கு அவமானத்தையும் ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையில் மீண்டும் ஈடுபட மாட்டேன்” என மன்னிப்புக் கடிதம் எழுதிய அந்த மாணவர், அதை 1000 பிரதிகள் எடுத்து பள்ளி மாணவர்களிடம் விநியோகித்துள்ளார்.

இதையும் படிக்க: துருக்கி | வெடித்த இயர்போன்.. இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட காது கேளாமை.. நிறுவனம் சொன்ன அலட்சிய பதில்!

இந்த விவகாரம் காட்டுத்தீயாய்ப் பரவியதை அடுத்து இணையத்தில் பலரும் எதிர்வினையாற்றினர். இதுகுறித்த பயனர் ஒருவர், “இரவு 11 மணிக்குப் பிறகு கழிப்பறைக்குச் செல்வது ஏன் பள்ளியின் விதிகளை மீறுகிறது என்று எனக்கு புரியவில்லை. கழிப்பறை செல்ல வேண்டிய நேரத்தில் யாரால் கட்டுப்படுத்த முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மற்றொரு பயனர், ”இந்தப் பள்ளி, கடுமையான விதிமுறைகளைக் கொண்ட சிறைச்சாலையைச் சார்ந்திருக்கிறது’’ எனப் பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் செயலுக்கு சீனாவின் கல்வி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பள்ளி நிர்வாகத்தின் ஒழுக்கக் கொள்கைகளைத் திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாணவர் எழுதிய கடிதத்தின் 1,000 பிரதிகளை அச்சிட்டதற்கு, இழப்பீடு வழங்கும்வகையில், மாணவருக்கு 100 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1200) செலுத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: என்னது தூங்குறதுக்கு லட்சம் லட்சமா பரிசா! ஸ்லீப் சாம்பியன் போட்டியில் 9 லட்சம் வென்ற பெங்களூரு பெண்!