உலகம்

சீனர்களும் கலந்து கொண்ட மலேசிய தைப்பூச திருவிழா

சீனர்களும் கலந்து கொண்ட மலேசிய தைப்பூச திருவிழா

webteam

தைப்பூசத்தையொட்டி மலேசியா முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தைப்பூசத் திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் களைகட்டியது. மலேசிய வாழ் இந்துக்களின் இரண்டாவது மிகப்பெரிய பண்டிகையாகத் திகழ்வது தைப்பூசம். தமிழகத்திற்கு அடுத்து, மிகப் பெரிய முருகன் கோயில் கோலாலம்பூர் பத்துமலை சுப்ரமணியர் ஆலயமாகும். மிகவும் பழமை வாய்ந்த பத்துமலை குகைக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவிக்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் பொதுவிடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அதிலும் குறிப்பாக இவ்வருடம் வார தொடக்கத்தில் தைப்பூசம் என்பதால், வார விடுமுறையோடு சேர்த்து நீண்ட விடுமுறையில் தைப்பூசத்தை மலேசிய தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தைப் போன்று மலேசியாவிலுள்ள பினாங்கு தண்ணீர்மலை ஆலயம், ஈப்போ கல்லுமலை, கெடா சுங்கை பட்டாணி ஆலயங்களும் தைப்பூசத்திற்கு பெயர்பெற்ற முருகன் திருத்தலங்களாகும். அங்கும் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடங்களை சுமந்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பத்துமலை தைப்பூசம் மயில்காவடிகளுக்கு பிரசித்தி பெற்றது. அந்த வகையில் பக்தகோடிகள் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்த பத்துமலை திருத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இவ்வருடமும், மலாய்காரர்கள், சீனர்கள், வெளிநாட்டினர் என பலரும் இந்துக்களுடன் சேர்ந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்தத் தைப்பூசத் திருவிழா மலேசியர்களின் ஆன்மிக கலாசாரம் எதிர்காலத்தில் மேன்மையுற்று விளங்கும் என்பதைக் காட்டுகிறது.