உலகம்

இருமுனதுக்கே எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

இருமுனதுக்கே எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Sinekadhara

காரமான உணவை சாப்பிட்டுவிட்டு இருமிய பெண்ணின் 4 விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இவர் காரமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இருமல் ஏற்பட்டுள்ளது. வேகமாக இருமியபோது மார்புப்பகுதியில் ஏதோ நொறுங்குவது போன்று சத்தம் கேட்டுள்ளது. இருப்பினும் ஹுவாங் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆனால், அதன்புறகு அவருக்கு மார்பு பகுதியில் எப்போதும் வலி இருந்ததுடன், சாப்பிடவும், மூச்சுவிடவுமே மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரை சென்று சந்தித்துள்ளார்.

அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப்பார்த்த மருத்துவர்கள் ஹுவாங்கின் மார்பு விலா எலும்புகள் உடைந்திருந்ததை கண்டறிந்தனர். ஒன்றல்ல, இரண்டல்ல; நான்கு எலும்புகள் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இருமியதையும், அப்போது நொறுங்கும் சத்தம் கேட்டதையும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு மார்புப்பகுதியில் கட்டுப்போட்ட மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

ஹுவாங் மிகவும் ஒல்லியாக பலவீனமாக இருப்பதே இந்த எலும்பு முறிவுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹுவாங்கின் உயரம் 171 செ.மீ ஆனால் அவருடைய எடை 57 கிலோதான். மேலும், அவருடைய மேற்புற உடல் மிகவும் மெலிந்தே இருக்கிறது எனவும் ஹுவாங் வருத்தம் தெரிவித்துள்ளார். உடல் எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்யவிருப்பதாக கூறுகிறார் ஹுவாங்.

ஹுவாங்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், “உங்களுக்கு தோலுக்கு அடியிலிருக்கும் மார்பெலும்புகள் வெளியே தெரிகிறது. எலும்புகளை தாங்கிப்பிடிக்க சதை இல்லை. எனவே, இருமும்போது எலும்பு முறிவு எளிதாக ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.