உலகம்

தாக்குதல் நடத்துவோம் - மீண்டும் சீனா மிரட்டல்

தாக்குதல் நடத்துவோம் - மீண்டும் சீனா மிரட்டல்

webteam

சிக்கிம் எல்லையில் இன்னும் 2 வாரத்துக்குள் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சாலையை அமைக்க அனுமதித்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடையாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது. மேலும் சீனா தன்னிச்சையாக இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அதனை கைவிட்டு பழைய நிலையே தொடரவேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் சீன ராணுவம், எங்களது எல்லைக்குள்தான் இந்திய படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன என்றும், இந்தியா தனது ராணுவத்தை உடனே திரும்ப பெறவேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் எழுந்த பிரச்சினையை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் டோக்லாமில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளன. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன ராணுவம், "இந்த பகுதியில் இருந்து இன்னும் 2 வாரத்துக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும். இதற்காக சிறிய அளவிலான போர் நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ளும். இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்த பிறகே இந்த தாக்குதல் நடத்தப்படும்" என கூறியுள்ளது.