உலகம்

23 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை கைது

23 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை கைது

webteam

சீனாவின் கிண்டர்கார்டன் பகுதியில் குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்த ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டு சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசூவோ நகரில் மெங்மெங் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று வழக்கம்போல் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் குழந்தைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உணவில் நைட்ரேட் ரசாயனப் பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் மீன் தயாரிப்பு உணவுகள் கெடாமல் இருப்பதற்காக சோடியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் எனவும் ஆனால் அது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் நச்சுத்தன்மையை தரக்கூடியதாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி ஆசிரியை ஒருவர் குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும் அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

இதில் உடனடியாக 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.