உலகம்

கிம் ஜாங் உன் உடல்நிலை - ஆலோசனை வழங்க மருத்துவக்குழுவை அனுப்பிய சீனா? 

webteam
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை சார்ந்து ஆலோசனை வழங்க சீனா, மருத்துவ நிபுணர்கள் குழுவை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குச் செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியில் புகைப் பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
  
 
 வட கொரிய விவகாரங்களைக் கவனிக்கும் அதிகாரிகளின் தகவலைக் குறிப்பிட்டு சிஎன்என் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலைத் தென் கொரியா மறுத்தது. அது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியது.
 
 
இந்நிலையில் வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து ஆலோசனை வழங்குவதற்காக மருத்துவ நிபுணர்கள் உட்பட ஒரு குழுவை வட கொரியாவுக்கு சீனா அனுப்பியுள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.  நிலைமையை நன்கு அறிந்த மூன்று அதிகாரிகள் இதனைக் கூறியுள்ளதாக feedsyndicate செய்தி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
 
 
அந்த மூன்று அதிகாரிகள் தெரிவித்துள்ள செய்தியில், வட கொரிய  அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து ஆலோசனை வழங்குவதற்காக மருத்துவ நிபுணர்கள் உட்பட ஒரு குழுவை  வட கொரியாவுக்கு சீனா அனுப்பியுள்ளது.  சீன மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பயணம் வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது.  சீன அணியின் இந்தப் பயணம் எதைக் குறிக்கிறது என்பதை ராய்ட்டர்ஸ் செய்தியால் உடனடியாக தீர்மானிக்க முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
 
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச தொடர்புத் துறையின் மூத்த உறுப்பினர் தலைமையிலான தூதுக்குழு கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கிலிருந்து வட கொரியாவுக்குப் புறப்பட்டதாக இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான வட கொரியாவுடன் முக்கிய விவகாரங்களை கையாளும் சீனாவைச் சேர்ந்தது இந்தத் துறை என்பது குறிப்பிடத்தக்கது.