சீனாவில் வலசையாக வந்த யானை கூட்டத்தையும், ஊர் மக்களையும் பாதுகாக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வலசையாக (இடம்பெயர்ந்து) வந்தபோது, யானைகள் வழியில் படுத்துறங்கும் காட்சிகள் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
சீனாவின் ஷி சுவாங்பன்னா டாய் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய 15 யானைகள் இதுவரை 500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, யுனான் மாகாணத் தலைநகர் கன்மிங்கிற்கு வந்துள்ளன. சுமார் 9 கோடி பேர் வசிக்கும் இந்நகரத்தில் யானைகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களால் யானைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்காக போக்குவரத்தை தடை செய்வது, யானைகள் வரும் பாதையில் இருக்கும் குடியிருப்பு வாசிகளை உஷார்படுத்தி, வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்துவது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துள்ளனர்.
யானைகளும் பெரும்பாலும் பிரதான சாலைகளிலேயே பயணிக்கின்றன. ஒரு சில நேரங்களில் மட்டுமே உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. இதை தடுப்பதற்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே பெரிய தொட்டியில் யானைகளுக்கு பிடித்த உணவுகளை குவித்துள்ளனர். வலசை மாறிய யானைகளின் இந்த பயணத்தில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. யுனான் மாகாணத்தில் உள்ள வனப்பகுதிக்கு செல்லும் வரை யானைகளை தூரத்தில் இருந்தபடியே அதிகாரிகள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
யானைகள் மனித குடியிருப்புகளை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், கண்காணிப்பு குழுக்கள் தற்போது அவற்றின் நகர்வுகளை அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க பின்தொடர்ந்து வருகின்றது. 400க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும் இந்த கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு சீனாவின் கன்மிங் நகரின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தின் வனப்பகுதியில் ஒரு நாள் ஓய்வெடுத்தபின், 15 காட்டு யானைகளும் மீண்டும் வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன.
மாகாண வன தீயணைப்பு படையினரால் எடுக்கப்பட்ட ட்ரோன் புகைப்படங்கள், ஜின்னிங் மாவட்டத்தில் ஒரு வனத்தின் நடுவில் யானை கூட்டம் தூங்குவது, உண்பது என ஒரு நாள் முழுவதும் ஓய்வு எடுத்தது பதிவானது. அப்போது ஏற்பட்ட இடியுடன் கூடிய பலத்த மழையால் யானை கூட்டம் பாதிக்கப்பட்டது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கடும் மழைக்கு மத்தியில் மீண்டும் வடக்குப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், மீண்டும் ஒரு வருட கால, அல்லது 500 கிலோமீட்டர் மலையேற்றத்தை தொடங்கியுள்ளது யானை கூட்டம் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக யானை இனங்கள் பருவகால இடம்பெயர்வு பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்த யானைகள் மேற்கொண்டுள்ள இந்த பயணம் உணவுக்கான தேடலால் தூண்டப்பட்ட ஒரு தன்னிச்சையான பயணமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனாவில் யானை இனத்திற்காக எஞ்சியிருக்கும் இடமாக ஷி சுவாங்பன்னா டாய் மாகாணத்தில் உள்ள வனப்பகுதி இருந்து வந்தது. ஆனால் இந்த வெப்பமண்டல காடுகள் கடந்த சில ஆண்டுகளில் வாழைப்பழம், தேயிலை, ரப்பர் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. சில இடங்கள் பாரம்பரிய சீன மருத்துவத்திற்கு இலாபகரமான மூலப்பொருட்களை நடவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதனால் வனப்பகுதி படிப்படியாக சுருங்கிவிட்டது. இந்த காரணிகளால்தான் யானைகள் தங்கள் சொந்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றன என லண்டன் விலங்கியல் சங்கத்தின் பாதுகாவலர் பெக்கி ஷு சென், வைஸ் வேர்ல்ட் பேட்டியில் கூறியிருக்கிறார்.