உலகம்

பயமுறுத்தும் கொரனோ ! உலக நாடுகள் அஞ்சுவது ஏன் ?

பயமுறுத்தும் கொரனோ ! உலக நாடுகள் அஞ்சுவது ஏன் ?

jagadeesh


உலக நாடுகள் கடந்த சில வாரங்களாக அதிகம் பயன்படுத்தும் பெயர் கொரனோ. இதனைக் கண்டு அ‌‌ரசுகள் அஞ்ச என்ன காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

சீனாவின் wuhan மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸ்தான் கொரனோ. கடுமையான சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த வைரஸால் இதுவரை இருவர் உயிரிழந்திருப்பதாகவும் 50-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ தாண்டியிருக்கக் கூடும் என்ற ஒரு பேச்சும் நிலவுகிறது. ஆண்டுதோறும் புதிய வைரஸ்கள் தோன்றுவதும், அதனை தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்துவதும் உலகில் இயல்பான ஒன்றுதானே என ஆய்வாளர்களை நிம்மதி அடையவிடவில்லை இந்த கொரனோ வைரஸ்.

காரணம் 2002-ஆம் ஆண்டு உலகையே நடுங்கவைத்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய சார்ஸ் வைரஸும், இதே கொரனோ வகை வைரஸ்தான். அதன்பின், 2012-ஆம் ஆண்டு சவுதி அரேபியா மற்றும்‌ மத்திய கிழக்கு நாடுகளை ‌அச்சுறுத்திய MERS வைரஸும் கொரனோ குடும்பத்தைச் சேர்ந்ததே. இதன் காரணமாகவே, தற்போது தோன்றியுள்ள புதிய கொரனோ வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளது உலக சுகாதார மையம். ஆண்டுக்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவில் இருந்து சீனாவின் wuhan மாகாணத்திற்கு சென்றுவருவதால் கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த நாடு தீவிரப்படுத்தியுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் விமான நிலையங்களில் சீன பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய கொரனோவின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. சீனா செல்லும் இந்தியர்கள் உடல் நலத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்க மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இறைச்சி சந்தைகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்பட்டாலும், இதுவரை புதிய கொ‌ரனோ எப்படி பரவுகிறது, அதனை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து என்ன என எதுவுமே கண்டறியப்படவில்லை.‌ தற்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதலான விஷயம், புதிய கொரனோ வைரஸ் மனிதர்களிடம் இருந்து அடுத்தவருக்கு பரவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்யவில்லை.