சீனாவில் ஆங்கிலம் கற்ற மருத்துவப் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 45 கல்லூரிகளில் மட்டுமே ஆங்கில வழி மருத்துவக் கல்வி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், சீனாவில் மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டி வரும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது வரை 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அங்கு பயின்று வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை விட, சீனாவில் மருத்துவம் படிப்பது எளிமை என்பதால், அண்மை காலங்களாக அங்கு சென்று பயில்வதற்கு இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் சீனாவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆங்கிலம் வழியில் மருத்துவக் கல்வி அளிப்பதற்காக மருத்துவ பேராசிரியர்களுக்கு சீனாவில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், வெறும் 45 கல்லூரிகளில் மட்டுமே ஆங்கில வழி மருத்துவக் கல்வி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன் 200 கல்லூரிகளில் ஆங்கில வழி மருத்துவக் கல்வி வழங்கப்பட்டு நிலையில், அந்த எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.