உலகம்

கல்வான் பள்ளத்தாக்கு: இந்தியாவை குற்றஞ்சாட்டி சீனா வெளியிட்ட வீடியோ!

கல்வான் பள்ளத்தாக்கு: இந்தியாவை குற்றஞ்சாட்டி சீனா வெளியிட்ட வீடியோ!

jagadeesh

கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் இந்தியா அத்துமீறியதாக கூறி வீடியோவை வெளியிட்டுள்ளது சீனா.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில், சீன தரப்பில் 5 முன்கள அதிகாரிகள், 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் முதல்முறையாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டது. இதனையடுத்து சீன அரசு ஊடகத்தை சேர்ந்த ஷென் ஷிவெய் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் "சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் எப்படி ஊடுருவுகிறார்கள் என்று பாருங்கள். இரு தரப்பு ராணுவத்தினரும் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் நதியைக் கடந்து பாறைகளுடன் கூடிய கரையை அடைகின்றனர். அங்கே இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுகின்றனர். வாக்குவாதங்களும் நடக்கின்றன. இரவு நெருங்க, ராணுவ வீரர்கள் டார்ச் விளக்குகள், தடுப்புகளுடன் மலை உச்சியில் நிற்கின்றனர். இருதரப்பினரும் வசைபாடியபடி கோஷமிடுகின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ குற்றச்சாட்டு குறித்து இந்தியா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையே  இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மோல்டோ என்ற இடத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாங்கங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் திரும்ப பெறுவது, மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.