உலகம்

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த 55கிமீ சீனா கடல் பாலம்!

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த 55கிமீ சீனா கடல் பாலம்!

webteam

சீனாவின் ஹாங்காங்கிலிருந்து மக்காவ் மற்றும் ஜூஹாயை இணைக்கும் உலகின் மிக நீளமான பாலம் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் வகையில் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த உலகின் மிக நீளமான பாலம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதுவரை கடலால் பிரிக்கப்பட்டிருந்த மக்காவ் மற்றும் ஜூஹாய் நகரங்கள் இந்தப் பாலத்தின் மூலம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பாலம் ஹாங்காங்கையும் மக்காவையும் இணைக்கும் தொப்புள் கொடி என்று வர்ணிக்கப்படுகிறது.

120 ஆண்டுகளானாலும் அசையாமல் இருக்கும் இந்தப் பாலம் 55 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. Pearl River Delta என்று கூறப்படும் கடலுக்கு மேல் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானங்களில் இரும்பினால் ஆன கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைப்பதற்கு சுமார் 4 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம்தான் ஹாங்காங்கின் புதிய சுற்றுலா தளமாக மாறவுள்ளது. கடலுக்கு அடியில் 6.7 கி.மீ தூரத்திற்கு இந்தப் பாலம் சுரங்க பாதையாக செல்கிறது. உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலம் என்ற பெருமையை இந்த மெகா பாலம் பெற்றுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பாலம் சீனா - ஹாங்காங் இடையிலான நகரங்களை ஒரு மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய 11 நகரங்களை இந்தப் பாலம் இணைக்கிறது. இந்தப் பிரமாண்ட பாலத்தின் மூலம் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியடைவது மட்டுமல்லாமல் சிறந்த சுற்றுலா தளமாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் பாலத்தில் காரில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தாராளமாக பயணம் செய்ய முடியும்.

ஹாங்காங் மற்றும் மக்காவ் நகரங்களில் ஆதிக்கம் செலுத்தவே சீனா இந்தப் பாலத்தை கட்டியிருக்கிறது என்று கூறப்பட்டாலும், பொறியியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே இந்தப் பாலம் பார்க்கப்படுகிறது‌.