உலகம்

இந்திய அரசின் இணையத் தளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தும் சீனா?

இந்திய அரசின் இணையத் தளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தும் சீனா?

PT

லடாக் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சீனா, இந்திய அரசின் இணையத் தளங்கள், ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய எல்லைக்குள் நுழைந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சீனா. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் மரணமடைந்தனர். சீனா தரப்பிலும் 30 க்கும் மேற்ப்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. இதனால் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது சீனா, இந்தியாவின் மீது தனது சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்திய அரசின் இணையத் தளங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் வங்கிப் பரிவர்த்தனை முறைகளையும் குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் படி “ இந்தியாவின் மீதான சைபர் தாக்குதல் சீன நகரின் செங்டு என்ற இடத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. ஹேக்கர்கள் அதிகம் வாழும் பகுதியாக அறியப்படும் செங்டு பகுதியிலிருந்து ஹேக்கர்களை பணியமர்த்தி இந்தியாவின் மீதான சைபர் தாக்குதலை சீனா அரங்கேற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இவர்களின் நோக்கம் என்னவென்றால் இந்திய அரசுத் துறைகளின் இணையதளங்களை 'ஹேக்' செய்து வைரஸ்களை பரவவிட்டு, அவற்றை இயங்க விடாமல் நிலைகுலையச் செய்வது எனக் கூறப்படுகிறது.


பெரும்பாலும் ஏ.டி.எம். மையங்களை செயலிழக்க வைப்பதையை நோக்கமாகக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சைபர் தாக்குதல் நடந்து வந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமையிலிருந்து சீனா இந்தியாவின் மீதான தனது சைபர் தாக்குதலைத் நேரடியாகத் தொடங்கியிருக்கிறது.