உலகம்

'கொரோனா' பரவிய செய்தியை வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு சீனாவில் 4 ஆண்டுகள் சிறை!

'கொரோனா' பரவிய செய்தியை வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு சீனாவில் 4 ஆண்டுகள் சிறை!

webteam

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வுஹானில் பரவியபோது தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.

அந்தப் பெண் பத்திரிகையாளர் பெயர் ஜாங் ஜான். கொரோனா பரவத் தொடங்கியபோது, வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக கூறி, நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது சீன அரசு. இதன் விசாரணையை முதலில் எதிர்கொண்டார் ஜாங் ஜான்.

கொரோனா பரவலின் ஆரம்ப கட்டங்களில் தொற்றுக்களை அறிக்கை செய்த விதம் சிக்கலைத் தூண்டியது என ஜாங் ஜான் கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் அவரது நேரடி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன. இது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், ட்விட்டர், யூடியூப் மூலமாக ஜான் தனது செய்திகளைப் பரப்பினார் எனக் கூறப்படுகிறது. கட்டுரையில் "மக்களுக்கு அரசாங்கம் போதுமான தகவல்களை வழங்கவில்லை, பின்னர் நகரத்தை பூட்டியது. இது ஒரு பெரிய மனித உரிமை மீறல்" என்று அவர் எழுதினார்.

மேலும், வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளை பத்திரிகையாளர் ஜாங் ஜான் பேட்டியாகக் கொடுத்தார் என்றும் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது. கூடவே, அடிக்கடி சண்டை போடுதல், பிரச்னையை ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஜான் ஈடுபட்டார் என்றும் வாதங்களாக முன்வைத்தது.

இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, தற்போது ஷாங்காய் புடாங் புதிய மாவட்ட மக்கள் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தண்டனை அளிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த ஜாங் ஜானின் தாய் கதறி அழுதுள்ளார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், ஜாங் ஜானின் வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு, ``தண்டனையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஜான் ஆளானார்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த 37 வயதான ஜாங்கின் உடல்நலம் பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. தற்போது அவர் ஒரு நாசி குழாய் வழியாக கட்டாயமாக உணவு உட்கொள்ளவைக்கப்படுகிறார்.

இதற்கிடையே, ஜாங் ஜான் ஆன்லைனில் "தவறான கருத்துகளை" பரப்பியதாக நீதிமன்றம் கூறினாலும், அரசு தரப்பு அதன் ஆதாரங்களை நீதிமன்றத்தில் முழுமையாக வெளியிடவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், கோவிட் -19 இன் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு நிபுணர்களின் சர்வதேச குழு சீனாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.