நூற்றாண்டுக் காலமாக, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பன்னாட்டு மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான இருமல் மருந்தையும் உற்பத்தி செய்து விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மருந்தைக் குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.
அதில், இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதைக் குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா, ஈஸ்வதினி உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்துப் பாட்டில்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்துவந்த டால்கம் பவுடர் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு அதன் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.