கடந்த மே 1ஆம் தேதி ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் ஒரு பைலட் உடன் கொலம்பியாவில் இருந்து அமேசான் மழைக்காட்டின் மேல் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு குழந்தைகள், அவர்களின் தாய், பைலட் உள்ளிட்ட மூவர் பயணம் செய்தனர். அப்போது விமானம் அமேசான் வனப்பகுதியில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் குழந்தைகளின் தாய் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தின் பாகங்கள் கிடந்த பகுதியில் மூவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் விமானத்தில் பயணித்த மற்ற 4 பேரின் கதி என்னானது என்பது தெரியவில்லை.
அதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து வெகு தூரத்தில் குழந்தைகளின் ஆடைகள், பால் பாட்டில் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதனால் குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதி ராணுவம் தேடுதல் வேட்டையை தொடர்ந்தது. அமேசான் மழைக்காடுகள் மிகவும் அடர்த்தியானதும் ஆபத்தானதும் என்பதால் பழங்குடியினர் உதவி இல்லாமல் அங்கே தேடுதல் பணியை செய்வது கடினம். அதனால், ராணுவம் பழங்குடிகள் உதவியை நாடியது.
அவர்களும் உதவிக்கரம் நீட்ட, தொடர்ந்து 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இந்தப் பணியில் ஏராளமான தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 40 நாட்களுக்குப் பின்னர் 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு காடுகளைப் பற்றி நன்கு தெரியும். அதன் காரணமாகவே அவர்கள் இந்த அடர்ந்த வனத்தில் இத்தனை நாட்களாக தாக்குப்பிடித்து உயிர் வாழ்ந்து இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விமான விபத்தில் மாயமான குழந்தைகள் 40 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது கொலம்பியா மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.