கோழி - முட்டை web
உலகம்

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? தீர்க்கபடாத கேள்விக்கு பதிலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

காலம் காலமாக கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்வி சமூகத்தில் கேட்கப்படுவது உண்டு. இதற்கு பதிலளிப்பது கடினம் என்பதுடன் அதற்கு ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும் என்பதால் யாரிடமும் இந்த கேள்விக்கு விடை இருக்காது.

Rishan Vengai

நீ என்ன அவ்வளு பெரிய புத்திசாலியா? அப்படியானால் இந்த கேள்விக்கு பதில்சொல் பார்க்கலாம் என பெரும்பாலான சமயங்களில் நம்மை திக்குமுக்காடவைக்கும் கேள்வியாக வைக்கப்படுவது “முதலில் வந்தது முட்டையா?அல்லது கோழியா?” என்பதுதான்.

இது எந்த அளவுக்கு தீர்க்கமுடியாத பிரச்னை என்றால், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? என நண்பர்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதம் முடிவில் கொலையில் சென்று முடிந்தது.

கோழி முட்டை

இப்படி காலங்காலமாக தீர்க்கவே முடியாத கேள்வியாக இருந்துவரும் கோழியா? முட்டையா?, இல்லை முட்டையிலிருந்துதான் கோழி, இல்லை இல்லை கோழியிலிருந்து தான் முட்டை என திண்டாடும் அனைவருக்கும் இதுதான்பா பதில் என கூறும் வகையில் விஞ்ஞானிகள் அறிவியல் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது?

ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இக்தியோஸ்போரியன் நுண்ணுயிரியான குரோமோஸ்பேரா பெர்கின்சி (Chromosphaera Perkinsii) எனப்படும் ஒற்றை செல் உயிரினத்தை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்துதான் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பில், முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற புதிருக்கு விடை தெரியவந்துள்ளது. அதாவது பல்லுயிரினங்கள் முதலில் தோன்றியதா அல்லது முட்டையா என்ற புரிதல் இந்த ஆராய்ச்சியின் படி தெரியவந்துள்ளது.

நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி கரு போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் விலங்குகளின் தோற்றத்திற்கு முன்பே இருந்தது என்பது தெரியவந்துள்ளது. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இக்தியோஸ்போரியன் நுண்ணுயிரியான குரோமோஸ்பேரா பெர்கின்சி என்ற ஒற்றை செல் உயிரினத்தை கொண்டு செய்த ஆராய்ச்சியின் படி, ஒற்றை செல்லானது அதிகப்படியான வளர்ச்சியடையும் போது இரண்டாக பிரிகிறது. அப்படி பிரியும்போது அவற்றில் பல்லுயிரினங்களை உருவாக்கும் திறன் நிறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் விஞ்ஞானிகள் வைக்கும் முக்கிய சந்தேகம்..

நடத்தப்பட்ட ஆராய்ச்சி குறித்து சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் உயிர்வேதியியல் நிபுணர் ஓமயா டுடின் விளக்குகையில், "குரோமோஸ்பேரா பெர்கின்சி ஒரு ஒற்றை செல்லுலார் இனம் என்றாலும், பூமியில் முதல் விலங்குகள் தோன்றுவதற்கு முன்பே, பல்லுயிர் ஒருங்கிணைப்பு மற்றும் பரிணாம மாற்றத்திற்கான செயல்முறைகள் ஏற்கனவே அதில் இருப்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

Multicellular development of Chromosphaera perkinsii (O Dudin)

சி. பெர்கின்சி பாலிண்டோமி எனப்படும் செயல்முறைக்கு உட்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர், இது விலங்குகளின் கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களை ஒத்திருக்கிறது. அதாவது சி.பெர்கின்சி அதிகப்படியான வளர்ச்சியை எட்டும்போது இரண்டாகவோ அதிகமாகவோ பிரிகிறது. இந்த பிரிவைத் தொடர்ந்து, உயிரினமானது பிளாஸ்டுலா போன்ற உயிரணுக்களின் தொகுப்பை உருவாக்குகிறது, இது விலங்கு கருக்களின் சிறப்பை ஒத்திருக்கிறது. பிரியும் டிவிசனுக்குள் குறைந்தது இரண்டு வெவ்வேறு செல் வகைகள் அடையாளம் காணப்பட்டன என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோழி - முட்டை

ஆனால், இவற்றில் இருக்கும் பெரிய சந்தேகத்தை விஞ்ஞானிகள் முன் வைத்துள்ளனர். அதாவது இந்த கண்டுபிடிப்பானது ஆதிகாலத்தில் இந்த ஒற்றை செல்லுக்குள் இருந்ததின் உண்மைதன்மையா? அல்லது இத்தனை ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றமா? என்ற பெரிய சந்தேகத்தை வைத்துள்ளனர்.