உலகம்

செர்னோபில் அணுமின் நிலையத்தை மீட்டுவிட்டோம் - உக்ரைன் அரசு

செர்னோபில் அணுமின் நிலையத்தை மீட்டுவிட்டோம் - உக்ரைன் அரசு

webteam

செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுவிட்டதாக உக்ரைன் அரசு சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு செர்னோபில் அணு உலை பகுதியை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் கூறியிருந்தது.

செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், அவர் ரஷ்யாவின் இந்த ஆபத்தான நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் 4 நாள்களுக்கு பிறகு ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த செர்னோபில் அணுமின்நிலையம் மீட்கப்பட்டதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் அறிக்கை அளித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் அணுசக்தி நிறுவனம், செர்னோபில் அணுமின் நிலையத்தில் பழுதான மின்இணைப்பின் ஒரு பகுதியை சரிசெய்துவிட்டதாகவும் இப்போது அணுமின் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் முழுவதையும் வழங்க முடியும் என்றும் தகவல் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்ந்து டீசல் ஜெனரேட்டரில் இயங்கி வருவதாகவும் விரைவில் உக்ரைன் அரசின் மின்துறை இணைப்பில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.