உலகம்

கிடைத்தார், ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியர்: தொகையை பிரித்துக்கொண்ட 22 பேர்!

கிடைத்தார், ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியர்: தொகையை பிரித்துக்கொண்ட 22 பேர்!

webteam

அபுதாபி லாட்டரியில் ரூ.29 கோடி பரிசு விழுந்த நபரை லாட்டரி நிறுவனம் இறுதியில் கண்டுபிடித்தது. அவர் பரிசுத் தொகையை நண்பர்கள் 21 பேரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி ஒவ்வொரு மாதமும் நடைபெறுவது வழக்கம். இதில் டிக்கெட் வாங்கிய பல இந்தியர்கள் கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மங்களூரைச் சேர்ந்த முகமது பயஸ் என்பவருக்கு இதே லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்திருந்தது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த லாட்டரி குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார், 28,86,62,884 கோடி ரூபாய்!

இவர் கேரளாவின் செங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால், இவரைத் தொடர்பு கொள்ள லாட்டரி நிறுவனத்தினர் முயன்றனர். ஆனால், அவர் குறிப்பிட்டிருந்த நம்பர் வேறொருவருக்குச் சென்றது. அவர் கொடுத்த மற்றொரு எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், அவர் இப்போது இங்கு இல்லை என்று பதில் வந்தது. இதனால் அவரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்று அந்த லாட்டரி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயரை நிறுவனம் தொடர்பு கொண்டது. இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது சம்பளம் 29 ஆயிரம் ரூபாய். அவர் தன்னோடு பணியாற்றும் 21 பேருடன் இணைந்து இந்த லாட்டரியை வாங்கியுள்ளார். இதில் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழர், மற்றொருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த பரிசுத் தொகையை இவர்கள் அனைவரும் பிரித்துக்கொள்ள இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ரூ.1.32 கோடி கிடைக்கும். பரிசு விழுந்ததை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாட உள்ளதாம் இந்த நண்பர்கள் குழு!