உலகம்

நூற்றாண்டின் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் !

நூற்றாண்டின் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் !

webteam

விஞ்ஞானி என்றதும் அனைவரது நினைவுக்கும் வரும் பெயர் ஐன்ஸ்டீன். இயற்கையில் புதைந்திருக்கும் ஏராளமான ரகசியங்களை வெளிக்கொண்டு வந்தவர் அவருக்கு இன்று நினைவு தினம்.

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் நடந்து செல்லும் மனிதன், சாலையில் பயணிக்கும் கார், கடலில் செல்லும் கப்பல், வானத்தில் பறக்கும் விமானம், சூரியனைச் சுற்றும் கோள்கள், சுழன்று கொண்டிருக்கும் நட்சத்திரத் திரள்கள் என எல்லாவற்றின் இயக்கமும் சார்பானவை. தனித்தவை அல்ல. பார்வையாளர் அல்லது உணர்பவரின் இயக்கத்தைப் பொருத்து அவர் பார்க்கும் இயக்கமும் மாறுபட்டதாகத் தோன்றும் என்பதைத்தான் சார்பு நிலை என்கிறார்கள். இந்தச் சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர். கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதை. உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர்.

மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் புகழ்பெற்ற, சாதாரண மக்கள் வரை கேள்விப்பட்டிருக்கும் E = MC2 என்ற சூத்திரத்தை உருவாக்கியவர் ஐன்ஸ்டீன். 1921-ஆம் ஆண்டு இவர் பெற்ற நோபல் பரிசு, குவான்டம் விசையியல், ஒளிமின் விளைவு போன்றவை பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது. ஆய்ந்து பார்த்தால் இவர் அறிவியலுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். கடவுள் அண்டத்தை உருவாக்கினார். பொருள்கள் இருந்தன. ஐன்ஸ்டீன் வந்து அவற்றின் மீது ஒளியைப் பாய்ச்சினார் என்று கூறும் அளவுக்கு அவர் வகுத்துத் தந்த கோட்பாடுகள் அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தின.

1879-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன், குழந்தைப் பருவத்தில் மந்த புத்திக்காரராகவே அறியப்பட்டார். எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதிலளிக்க மாட்டார். அவசரமாகப் பதில்களை விரும்பும் ஆசிரியர்களுக்கு ஐன்ஸ்டீனைப் பிடிக்காது. பள்ளிகள் அவரைத் துரத்தின. இவருக்கும் வகுப்பறைகள் பிடித்திருக்கவில்லை. காந்த ஊசிகளை வைத்துக் கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார். 16 வயதில் பாலிடெக்னிக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் தோற்றுப் போனார். இருப்பினும் மேல்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து மீண்டும் பாலிடெக்னிக் கல்லூரில் சேர்ந்தார். இயற்பியலும் கணிதமும் அவருக்கு விருப்பமான பாடங்களாக இருந்தன. இயற்பியலில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார் அவையை ஐன்ஸ்டீன் டாக்டர் பட்டம் பெறுவதற்கு உதவின.

1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் மட்டுமல்ல அறிவயில் உலகுக்கே அதிசயங்களை வழங்கிய ஆண்டு. ஒளிமின்விளைவு, பிரௌனியன் இயக்கம், சிறப்புச் சார்புக் கோட்பாடு, E=MC2 என்ற நிறை-ஆற்றல் சமநிலை விதி என இயற்பியல் உலகை அதிரவைத்த ஐன்ஸ்டீனின் பல முக்கியமான படைப்புகள் இந்த ஆண்டில்தான் வெளியாகின. ஐன்ஸ்டீன் ஒரு யூதர் என்பதால் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் இவரது கருத்துகளை கடுமையாக எதிர்த்தனர். மற்றொரு தரப்பினர் தங்களது பழைய கோட்பாடுகளில் இருந்து விலகி வருவதில் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எல்லாம் வெவ்வேறு தருணங்களில் நிரூபணமாகின.

தொடர்ந்து பல கோட்பாடுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த ஐன்ஸ்டீனுக்கு உலகப் புகழ் கிடைத்ததுடன் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் அவருடன் ஒருகிணைந்து பணியாற்ற முன்வந்தனர். போஸான் என்று குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு பெயர் வருவதற்குக் காரணமான இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸும் அவர்களில் ஒருவர்.

ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அமெரிக்காவில் இருந்த ஐன்ஸ்டீன் அதன் பிறகு நாடு திரும்பவே இல்லை. இந்த முடிவே இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் கை ஓங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஜெர்மனியில் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக, ஐன்ஸ்டீனின் ஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதமே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டை புதிய வியூகத்தை வகுக்கச் செய்தது. அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அவற்றின் மூலமே போரின் முடிவுகள் மாறின.

அறிவியல் மட்டுமல்லாமல், அரசியல், சமூகம், தத்துவம், சேவை என பல துறைகளிலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் ஐன்ஸ்டீன். யூதர்களின் நலனுக்காகப் குரல் கொடுத்த அவர், தாம் ஒரு பொதுவுடமைவாதி என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆயுதத்தின் மூலமாக அமைதியை ஏற்படுத்த முடியாது, புரிதல் மட்டுமே அமைதிக்கான நிரந்தர வழி என்று கூறினார். அவரது அறிவியல் கருத்துகளை ஏற்றுக் கொண்ட வல்லரசுகள், அதற்குப் பின்னணியில் உள்ள அவரது தத்துவங்களை மட்டும் புரிந்துகொள்ளவில்லை.