உலகம்

ஓரிரு தினங்களில் தனி நாடு உதயமாகும்: கேட்டலோனியா தலைவர் கா‌ர்லஸ் உறுதி

ஓரிரு தினங்களில் தனி நாடு உதயமாகும்: கேட்டலோனியா தலைவர் கா‌ர்லஸ் உறுதி

webteam

ஸ்பெயினில் இருந்து ஓரிரு தினங்களில் தனி கேட்டலோனியா நாடு உதயமாகும் என அந்தப் பிராந்திய தலைவரான கார்லஸ் ‌பியூஜ்மான்‌ட் கூறியுள்ளார். 

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனிநாடு கோரி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பின் முதல் முறையாக பிபிசிக்கு பேட்டியளித்த கேட்டலோனியா பிராந்திய அரசின் தலைவர் கார்லஸ் இவ்வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்திலேயோ இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுவாக்கெடுப்பின்போது ஸ்பெயின் காவல்துறையினரால் ஏற்பட்ட வன்முறைக்கு 900 பேர் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் தரப்பிலும் 33 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைக்கு இடையிலும் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 90 சதவிகித வாக்காளர்கள் தனி கேட்டலோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனர்.

இந்த முடிவை ஏற்க மறுத்த ஸ்பெயின் அரசு, சட்டவிரோதமான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கண்டனம் தெரிவித்தது. இந்தச் சூழலில் பிபிசிக்கு பேட்டியளித்த கேட்டலோனியா தலைவர் கார்லஸ் மக்களின் விருப்பத்துக்கேற்ப ஓரிரு தினங்களில் தனி கேட்டலோனியா நாடு உருவாகும் என தெரிவித்துள்ளார்‌. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தால் ‌என்ன செய்வீர்கள் என நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, அனைத்தையும் மாற்றக்கூடிய அளவுக்கு மிகப் பெரிய தவ‌றாக ‌அந்நடவடிக்கை அமையும் என கார்லஸ் பதில் அளித்தார்.

இதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய ஸ்பெயின் மன்னர் ‌ஃபிலிப், மாகாண அரசுகளின் அதிகாரங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கேட்டலோனியா தலைவர்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி உள்ளனர். சட்டத்தின் ஆட்சிக்கான ஜனநாயக கொள்கைகளை அவர்கள் உதறி தள்ளிவிட்டனர், இதனால் ஒட்டுமொத்த ஸ்பெயினின் பொருளாதாரமும் சிக்க‌லில் தள்ளப்பட்டுவிட்டது என்று கூறினார்.