கூகுள் நிறுவனத்தில் சாதி பாகுபாடு இருப்பதாக செயற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கூகுள் நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் ஈக்வாலிட்டி லேப் என்ற அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி செளந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு கூகுள் நிறுவன ஊழியர்கள், மூத்த அதிகாரிகள் சிலர் கண்டனம் தெரிவித்த நிலையில், கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூகுள் நியூஸ் பிரிவு திட்ட மேலாளர் தனுஜா குப்தாவிடமும் நிறுவனம் விசாரணையை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலக, பிரச்னை பூதாகரமானது. ஊழியர்கள் இடையேயான சாதி பாகுப்பாட்டை கூகுள் ஆதரிப்பதாகவும் தனுஜா குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள ஈக்வாலிட்டி லேப், இந்தியாவில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சுந்தர் பிச்சை சாதி கட்டமைப்புகளை அறியாதவர் அல்ல என கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
இதற்கிடையில், தேன்மொழி செளந்தரராஜன் குறிப்பிட்ட சாதிக்கு எதிரான வெறுப்பு பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் என்றும், அவர் பங்கேற்கும் கருத்தரங்கால் ஊழியர்களிடையே சாதி பாகுபாட்டிற்கு வித்திடப்படும் என்ற கருதியதாலேயே நிகழ்ச்சியை ரத்து செய்ததாக கூகுள் விளக்கமளித்துள்ளது. பணியிடத்தில் சமத்துவத்தையும், அமைதியையுமே விரும்புவதாக கூகுள் செய்தித்தொடர்பாளர் shanon newberry தெரிவித்துள்ளார்.