கனடா, இந்தியா கொடி புதிய தலைமுறை
உலகம்

கனடாவில் ஆர்ப்பாட்டம்: இந்திய துணைத் தூதரகத்தை மூட காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் வலியுறுத்தல்

கனடாவின் இறையாண்மை, பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாக காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் குற்றம்சாட்டினர்

Jayashree A

கனடாவின் இறையாண்மைக்கு எதிராக இந்தியா செயல்படுவதாக காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் குற்றச்சாட்டு. இந்திய துணை தூதரகங்களை மூட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்.

கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.

கனடாவில் உள்ள இந்திய எதிர்ப்பாளர்களை, நிஜ்ஜார் கொலையில் தொடர்பிருப்பதாக மிரட்டி பணம் பறித்ததாக 6 இந்திய தூதர்களை கனடா அரசு வெளியேற்றியது. இதன் தொடர்ச்சியாக கனடாவில் உள்ள இந்திய துணை தூதரத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவின் இறையாண்மை, பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் கனடாவின் நடவடிக்கைகளுக்கு துணையிருப்பதாக கூறிய அவர்கள், இந்திய துணைத் தூதரங்களை மூடவும் வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் கனடாவின் எதிர்க்கட்சியான மக்கள் கட்சி தலைவர் மேக்சிம் பெர்னியர் நேற்று தனது எக்ஸ் வலைதள பதிவில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

மேக்சிம் பெர்னியர்

”கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடியுரிமை பெற்றவர். அவர் கனடா பிரஜை என்று கூறும் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் இது. ஏனெனில் காலிஸ்தான் தீவிரவாதிதான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்.

கடந்த 1997-ம் ஆண்டு முதல் கனடாவில் தஞ்சமடைய கேட்டு பல முறை நிஜ்ஜார் முயற்சித்துள்ளார். எனினும், அவருக்கு கனடா குடியுரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனாலும், எப்படியோ போலி ஆவணங்கள் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு கனடா குடியுரிமை பெற்றுள்ளார். அவருக்கு குடியுரிமை கொடுத்தது கனடா அரசின் தவறு.

கனடாவில் போலியாக தஞ்சம் அடைந்தவர்கள் நாடு கடத்தப்படுவதுபோல், நிஜ்ஜாரையும் நாடு கடத்தியிருக்க வேண்டும். நிஜ்ஜார் கனடாக்காரர் இல்லை. அவர் இறந்துவிட்டார். இப்போதாவது அவருடைய கனடா குடியுரிமையை ரத்து செய்து, நிர்வாக தவறை சரி செய்யவேண்டும்.

இதுபோன்ற தவறுகளை இப்போதாவது உணர்ந்து அவற்றை சரி செய்து இந்தியாவுடன் கனடா அரசு இணைந்து செயல்பட வேண்டும். கனடாவில் மற்ற சிக்கல்களை திசை திருப்பவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் விவகாரத்தை பேசி வருகிறார்.

நிஜ்ஜார் விவகாரத்தில் உண்மையான ஆதாரங்கள் இருந்தால், அதற்கேற்ப அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பது உண்மையாக இருந்தால், அது மிகப்பெரிய பிரச்னை. அதை கனடா அரசு சரியான முறையில் கையாள வேண்டும். ஆனால், இதுவரை இந்தியாவுக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் பிரதமர் ட்ரூடோ சொல்லவில்லை. இது பிரச்னைகளை திசை திருப்பவே ட்ரூடோ இப்படி பேசுகிறார் என்பதை காட்டுகிறது” இவ்வாறு கனடா எதிர்க்கட்சி தலைவர் மேக்சிம் பெர்னியர் கூறினார்.