புருனே இளவரசர் திருமணம் ட்விட்டர்
உலகம்

காதலில் விழுந்த புருனே இளவரசர்.. மன்னர் வம்சாவளி அல்லாத பெண்ணை கரம் பிடித்து ஒரேநாளில் வைரல்!

புருனே நாட்டின் இளவரசர் மதின், தனது காதலியை நேற்று முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

எண்ணெய் வளமிக்க ஆசிய நாடுகளில் புருனேவும் ஒன்று. இந்த நாட்டின் மன்னராக சுல்தான் ஹசனல் போல்கியா உள்ளார். இவரது 10வது மகனும் இளவரசமான அப்துல் மதின், அரச குடும்பத்தைச் சாராத தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை நேற்று (ஜன.11) திருமணம் செய்துகொண்டார்.

புருனேயின் இளவரசர் அப்துல் மதின் அந்நாட்டின் விமானப் படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக உள்ளார். ஊடகங்களில் பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் ஒப்பிடப்படும் மதின், ’ஹாட் ராயல்’ என அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு மே மாதம் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கும், 2022இல் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கும் இளவரசர் மதின் தனது தந்தையுடன் சென்றிருந்தார்.

மேலும், அவர் பிரிட்டனின் ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டில் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புருனேவை பிரதிநிதித்துவப்படுத்தி, போலோ விளையாட்டில் விளையாடினார். சமீபகாலமாக இளவரசர் மதீன் தனது தந்தையுடன் சர்வதேசரீதியில் முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குறுஞ்செய்தியால் காத்திருந்த கணவர்: அவசரமாக காலிசெய்த ரூம்.. மகனை கொலைசெய்த சிஇஓ வழக்கில் புதுதகவல்

அதேநேரத்தில், இளவரசர் அப்துல் மடினை திருமணம் செய்துகொண்ட யாங் முலியா அனிஷா, மன்னரின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரின் பேத்தி ஆவார். யாங் முலியா அனிஷா ஒரு ஃபேஷன் பிராண்ட் மற்றும் சுற்றுலா வணிகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இளவரசர் மதினும் அவரது காதலியும் எப்படி காதலித்தனர் என்பது குறித்து எந்த குறிப்பிட்ட தகவலும் இல்லை. ஆனால், அவர்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இளவரசர் மதின் சகோதரியின் திருமணத்திலும் அவர்கள் ஒன்றாகக் காணப்பட்டனர். இந்த நிலையில், இவர்களுடைய திருமணம், தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.

இதற்காக திருமண நிகழ்ச்சிகள் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் பிரம்மாண்ட விழாவுடன் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கியது. அரச குடும்ப மணவிழாவின் உச்சகட்டமாக ஜனவரி 14ஆம் தேதி, அரண்மனையில் பெரிய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. பின்னர் மணமக்கள் அணிவகுப்பும் இடம்பெற இருக்கிறது. இதில், உலக அளவில் அரச குடும்பத்தினரும் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜனவரி 14ஆம் தேதி, அரச குடும்ப வாகனத்தில் புதுமணத் தம்பதி வீதி வலம் வருவதைக் கண்டு மகிழ்ந்து, அவர்களுக்கு புருனே மக்கள் வாழ்த்து கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த ஊர்வலத்துடன் திருமண நிகழ்வு நிறைவுபெற இருக்கிறது.

இதையும் படிக்க: இந்த மூன்று பெண்கள் தான்! பில்கிஸ் பானு வழக்கில் நீதி கிடைக்கவேண்டி ஓயாமல் குரல் கொடுத்த போராளிகள்!