சமந்தா ஹார்வி எக்ஸ் தளம்
உலகம்

2024 புக்கர்பரிசை வென்ற ’Orbital’ நாவல்! போன்கூட வைத்திருக்காத எழுத்தாளர்.. யார் இந்த சமந்தா ஹார்வி?

2024ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு சமந்தா ஹார்விக்கு வழங்கப்பட்டுள்ளது.

Prakash J

புக்கர் பரிசு (Booker Prize) அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு; மற்றொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதேவேளையில், அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலில் நடுவர் குழுவினரால், ஒரு நீண்டபட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 13 படைப்புகள் இடம்பெறும். இந்த நீண்ட பட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும். பின்னர் அதிலிருந்து 6 புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வெற்றியாளர் அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். புக்கர் பரிசு வெற்றியாளருக்கு £50,000 பரிசுத் தொகை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 54.50 லட்சம்) வழங்கப்படும்.

அந்த வகையில், புத்தகங்களின் நீண்ட பட்டியலில் Wandering Stars, Wild Houses, Held, Creation Lake, This Strange Eventful History, Playground, Enlightenment, Orbital, James, The Safekeep, My Friends, Stone Yard Devotional, Headshot ஆகிய 13 புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து Held, Creation Lake, Orbital, James, The Safekeep, Stone Yard Devotional ஆகிய நூல்கள் இறுதிக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. இதில் ’ஆர்பிட்டல்’ (Orbital) நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்| களத்தில் யார் யார்?.. அநுர குமராவுக்கு சிறப்பு மெஜாரிட்டி ஏன் அவசியம்?

அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு சமந்தா ஹார்விக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய ‘ஆர்பிட்டல்’ (Orbital) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பே இந்த ‘ஆர்பிட்டல்’ நாவல். இது, 136 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. விண்வெளித்துறை சார்ந்ததொரு நூலுக்கு இத்தகைய கௌரவம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.

பிரிட்டனில் இந்தாண்டு அதிகம் விற்பனையான புத்தகமும் இதுவே. விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைக் குறித்து இப்புத்தகத்தில் சுவாரசியமாகக் கதை சொன்ன விதம்தான் இதற்கு முக்கிய காரணம். புக்கர் பரிசு நடுவர் குழு, ‘ஆர்பிட்டல்’ நாவலில் சமந்தா ஹார்வியின் உள்ளீட்டுள்ள வரிகளை, வெகுவாகக் பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 1979-ஆம் ஆண்டு பெனெலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய ‘ஆஃப்ஷோர்’ என்ற நாவலுக்காக அவருக்கு புக்கர் பரிசளிக்கப்பட்டது. புக்கர் பரிசு வென்ற நூல்களில் குறைந்த பக்கங்களைக் கொண்ட நாவலாக ‘ஆஃப்ஷோர்’ திகழ்கிறது. 132 பக்கங்களில் இந்நாவலை படைத்திருப்பார் எழுத்தாளர் பெனெலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட். இதற்கு அடுத்த இடத்தில், குறைந்த பக்கங்களைக் கொண்ட நாவலாக சமந்தா ஹார்வேயின் ‘ஆர்பிட்டல்’ உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பின், பெண் எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புக்கர் பரிசின் கடந்த 55 ஆண்டுகால வரலாற்றில், இந்தாண்டு பெண் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இறுதிப்பட்டியலில் தேர்வான சமந்தா ஹார்வே உள்ளிட்ட மொத்தம் 6 எழுத்தாளர்களில் ஐவர் பெண்கள் ஆவர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் | ‘சொந்தக்காலில் நில்லுங்கள்..’ அஜித் பவாருக்கு செக்வைத்த உச்ச நீதிமன்றம்!

சமந்தா ஹார்வி யார்?

1975இல் கென்ட்டில் ஒரு கட்டடத் தொழிலாளியின் மகளாக பிறந்த சமந்தா ஹார்வி, யார்க் மற்றும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். 2000களில், அவர் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட தளமான பாத்தில் உள்ள ஹெர்ஷல் வானியல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார். அவர் இப்போது பாத் ஸ்பா பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் ரைட்டிங்கில் எம்.ஏ படிப்பில் ஆசிரியராக உள்ளார். அவர் ஓர் எழுத்தாளராகவும் வலம் வருகிறார். அவர் இதுவரை ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வயதான கட்டடக் கலைஞரைப் பற்றிய அவரது முதல் நாவலான ’தி வைல்டர்னஸி’ற்காக 2009இல் புக்கர் பரிசுக்காக நீண்ட பட்டியலிடப்பட்டார்.

புத்தகத்திற்கு, பெட்டி டிராஸ்க் பரிசு வழங்கப்பட்டது. வர்ஜீனியா வூல்ஃபின் எழுத்துடன் ஒப்பிடப்பட்ட ஹார்வே, அவரது நாவல்களின் பல்வேறு அமைப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவர் ஜேம்ஸ் டெய்ட் பிளாக் விருது, பெண்கள் பரிசு, கார்டியன் முதல் புத்தக விருது மற்றும் வால்டர் ஸ்காட் பரிசு ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கட்டுரைகள் கிராண்டா இதழ், தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், தி நியூயார்க்கர், தி டெலிகிராப் மற்றும் டைம் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்துள்ளன. ஹார்வே மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்கிறார். அவருக்கு சமூக வலைதள கணக்குகள் எதுவும் இல்லை. அவரிடம் மொபைல் போன்கூட இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: கேரளா|’கலெக்டர் சகோதரர்’ என அழைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்.. யார் இந்த என்.பிரசாந்த்? பின்னணி?