பிரிட்டன் மன்னர் சார்லஸ் pt web
உலகம்

மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய்; பிரிட்டன் அரண்மனை அறிவிப்பு

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் இருப்பதாக பிரிட்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

Angeshwar G

பிரிட்டன் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சான்ட்ரிங்காம் (SANDRINGAM) மஹாலில் தங்கியுள்ளார். சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கடந்த 5 ஆம் தேதி பிரிட்டன் அரசு தெரிவித்தது.

தாயார் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்கு பிறகு 75 வயதான சார்லஸ் மன்னராக 2022 ஆம் ஆண்டு அதாவது 17 மாதங்களுக்கு முன் பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரும் அவரது மனைவியும் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ஹெலிக்காப்டர் மூலம் கிழக்கு இங்கிலாந்தின் கிராமப்புறத்தில் உள்ள சான்ட்ரிங்காம் (SANDRINGAM) மஹாலுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவர் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மன்னர் விரைவில் குணமடைய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் வேண்டியுள்ளனர். இதேபோல், பல்வேறு நாட்டின் தலைவர்களும் சார்லஸ் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அரச பணிகளில் இருந்து விலகியதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஹாரி அரண்மனையை விட்டு வெளியேறி இருந்தார். இந்நிலையில், மன்னர் சார்லஸ் சாண்ட்ரிங்காமிற்கு புறப்படுவதற்கு முன், மீண்டும் அரண்மனைக்கு வந்து தந்தையை அவர் சந்தித்ததாக உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இளவரசராக இருக்கும் வில்லியம் மன்னரின் சில பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நோயினை கண்டறிந்த போதும், தனது பெரும்பாலான பணிகளை மன்னர் சார்லஸ் மேற்கொள்வார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரத்திற்கு ஒருமுறை நடக்கும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்லஸின் சந்திப்பு வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.