உலகம்

ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை - பிரிட்டன் பிரதமர் போரிஸ் உறுதி

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் தனது ராணுவத் துருப்புகளை ரஷ்யா நிறுத்தியிருக்கும் சூழலில், அந்நாட்டின் மீது விரைவில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் எல்லைப் பகுதிகளில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதால் அங்கு கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. எப்போதும் வேண்டுமானாலும் உக்ரைனை ரஷ்யா தாக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எச்சரித்து வருகின்றன.

இந்த சூழலில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் கொண்ட இரண்டு பிராந்தியங்களை தன்னாட்சி பிரதேசங்களாக ரஷ்யா நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்நிலையில், அந்த இரண்டு பிராந்தியங்களிலும் ஆயிரக்கணக்கான ராணுவத் துருப்புகளை ரஷ்யா இன்று அனுப்பியது. இதனால் உக்ரைன் போர் விரைவில் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், "உக்ரைனுக்கு சொந்தமான பிராந்தியங்களில் தனது ராணுவப் படைகளை ரஷ்யா நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யா இதுபோன்று ஏதேனும் மோசமான செயலில் ஈடுபடும் என ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன். ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் விரைவில் அமல்படுத்தும். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள். தனது தவறினை புதின் விரைவில் உணர்ந்து விடுவார்" என அவர் கூறினார்.