belem ship pt web
உலகம்

128 ஆண்டு பழமையான கப்பல்.. ஒலிம்பிக் சுடரை பிரான்ஸ் தேசத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 89 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக்கின் பிறப்பிடத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பலில், ஒலிம்பிக் சுடர் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

PT WEB

ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸ் நாட்டில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர், பிரான்ஸ் நாட்டுக்கு பழமையான பெலம் கப்பலில் தனது 12 நாள் பயணத்தை துவக்கியுள்ளது. முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற அதே 1896ம் ஆண்டில், சுமார் 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பிரான்ஸில் கட்டப்பட்டதுதான் இந்த பெலம் கப்பல்..

தனது நீண்ட நெடிய கால பயணத்தில் வணிக கப்பல், சொகுசு கப்பல் என பெலம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. தனது முதல் பயணத்திலேயே தீ விபத்துக்குள்ளான பெலம், 1902ம் ஆண்டு மார்டினிக் தீவில் எரிமலை வெடிப்பிலிருந்தும், 1923ம் ஆண்டு ஜப்பானின் யோகோகாமா-வில் ஏற்பட்ட நில நடுக்கத்திலிருந்தும் தப்பியது.

1984 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பெலம் சுதந்திர தேவி சிலையின் நூற்றாண்டு, மறைந்த இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசெபத்தின் வைரவிழா உள்ளிட்டவற்றில் பங்கேற்றது.

பல கண்டங்களையும், பல மாற்றங்களையும் சந்தித்த பெலம் கப்பல், 128 ஆண்டுகளுக்கு தன்னுடன் பிறந்த ஒலிம்பிக் சுடரை தங்கள் நாட்டிற்கு ஏற்றி செல்லும் நிகழ்வு என்பது, காலம் மட்டுமே நிகழ்த்தக்கூடிய ஆச்சரியம் என்றுதான் கூற வேண்டும்..