டாலர், விளாடிமிர் புடின் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்க டாலருக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. விரைவில் புதிய நாணய மதிப்பு.. பிரிக்ஸ் மாநாட்டில் ஆலோசனை!

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் டாலருக்குப் பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

Prakash J

ஒரு நாட்டின் வளர்ச்சி, அதன் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் நம்பியே இருக்கிறது. குறிப்பாக, ஒரு நாட்டின் கரன்சி மூலம் வர்த்தகம் செய்யப்படுவதால், அந்த நாட்டுக்குத்தான் மதிப்பு அதிகம். காரணம், அக்கரன்சியானது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால் அதன் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். தவிர, இது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதுடன், பயன்படுத்துவதும் எளிதாகிறது. இதில், உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே செய்யப்படும் வர்த்தகம், அமெரிக்காவின் டாலரை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, உலகில் பெரும்பான்மையான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரை பயன்படுத்தியே வர்த்தகம் நடைபெறுகிறது.

அந்த வகையில், கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் டாலர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில நாடுகள் தங்கள் நாட்டின் கரன்சியாக அமெரிக்காவின் டாலரைக் கொண்டிருப்பதுடன், இன்னும் சில நாடுகள் தங்கள் நாட்டு நாணயத்துடன் அமெரிக்க டாலரை ஒப்பிடவும் செய்கின்றன. அதனாலேயே, உலகின் 60% நிதி கையிருப்புகள் அமெரிக்க டாலர்களில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் டாலர் முதன்மை கரன்சியாக மாறியதால், மற்ற நாடுகளும் அதை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஆரம்பித்தது. அதுமுதல் உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

எனவே உலக நாடுகள் மத்தியில் டாலருக்கு என்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. இது பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வளர்ச்சி, நமது ரூபாயை மதிப்பற்றதாக மாற்றிவிடுகிறது. இதே பிரச்னை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கும் இருக்கிறது. எனவே, இதனை சரிசெய்ய, டாலருக்கு எதிராக புதிய ரூபாய் நோட்டுகளை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் முயன்றுள்ளன. குறிப்பாக ரஷ்யா இதற்காக தீவிரமாக முயன்றுவருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா வர்த்தம் மேற்கொள்ளும்போது, அந்தந்த நாட்டின் பணமாக கொடுத்தால் போதுமானது என்று கூறியிருக்கிறது. எனவே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பிரிஜ் பூஜன் சிங்கிற்கு எதிரான போராட்டம்|வெளியான அதிர்ச்சி தகவல்.. உண்மையை உடைத்த சாக்‌ஷி மாலிக்!

இந்த வர்த்தக பரிமாற்றத்தை மேலும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான நாணய மதிப்பை உருவாக்க ரஷ்யா யோசித்து வருகிறது. இந்த நாணய மதிப்பில் 5 நாடுகளின் கொடியும் இடம்பெற்றிருக்கும். இதைக் கொண்டு இந்த 5 நாடுகளுக்குள் பணப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இது டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில், இந்த நாணய மதிப்பை யார் யார் எல்லாம் அச்சடிக்க முடியும்? இதற்கு தலைமை அலுவலகம் எங்கு இருக்கும்? போலி நாணய மதிப்பு நோட்டுகள் வந்தால் அதை எப்படி தடுப்பது? பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகள் சேர்ந்தால் அவர்களுக்கும் இந்த நாணய மதிப்பு பொருந்துமா எனப் பல கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் சாத்தியமாகும்பட்சத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக புதிய நாணயத்தின் மதிப்பும் உச்சம் பெறும் என நம்பப்படுகிறது.

முன்னதாக, சில நாடுகள் டாலரைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் நாட்டு நாணய மதிப்பில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்தியாவும் இணைந்திருப்பதுதான் வியப்புக்குரிய விஷயம். குறிப்பாக சவூதி அரேபியா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் டாலரைத் தவிர்த்து பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன. நிதி நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அமெரிக்காவின் டாலர் மதிப்பு கணிக்க முடியாத அளவுக்கு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அதிலும் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின் டாலரில் ஏற்படும் மாற்றம், பொருளாதார உறுதியற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டே, டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் மேற்கண்ட நாடுகள் களம் இறங்கியிருப்பதாக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவின் டாலர் மதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக, அமெரிக்க டாலரை நம்பியிருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த டாலர் மதிப்பிழப்பை ஆதரிக்கும் நாடுகளில் சீனாவும், ரஷ்யாவும் முன்னிலையில் உள்ளன. அந்த வகையிலேயே மீண்டும் இந்த டாலர் மதிப்பீட்டை முடுக்கும் வகையில் ரஷ்யாவின் கை ஓங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாலைவனப் பகுதியில் சிக்கித்தவிப்பு.. உபெர் நிறுவனத்தில் ஒட்டகம் புக்கிங்.. துபாயில் சவாரி செய்த பெண்