உலகம்

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!

webteam

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் இத்தகவலை முககவசம் அணிந்தவாறு போல்சனாரோ அறிவித்தார்.

கொரோனா தொற்று அதிகரித்தபோதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவதை பிரேசில் அதிபர் வழக்கமாக வைத்திருந்தார். 3 முறை கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போல்சனாரோவுக்கு 3 முறையும் சாதகமான முடிவே கிடைத்திருந்தது. இந்நிலையில்தான் காய்ச்சல், உடல் வலி என பாதிக்கப்பட்டு தற்போது கொரோனா தொற்றாளராக மாறியுள்ளார் பிரேசில் அதிபர்.

கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை பிரதான ஆயுதமாக கையிலெடுத்த நிலையில் அதற்கு முரணான நிலைப்பாட்டை எடுத்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார் போல்சனாரோ. கொரோனாவுக்கு பொது முடக்கம் தீர்வல்ல என்றும் கொரோனா தொற்றை விட பொது முடக்கம்தான் அதிக பாதிப்புகளை தரும் எனவும் போல்சனாரோ தெரிவித்திருந்தார்.

போல்சனாரோவின் இந்த கருத்துடன் உடன் படாத சுகாதாரத்துறை அமைச்சர்கள் இருவர் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகினர். முன்னதாக கொரோனாவை போல்சனாரோ அலட்சியமாக கையாள்வதாக கடுமையான புகார்கள் எழுந்திருந்தன. உலகிலேயே கொரோனா பாதிப்பில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான பிரேசிலில் அதன் அதிபருக்கே கொரோனா வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.