எரிந்து வரும் அமேசான் காடுகளில் தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உதவியை பிரேசில் அதிபர் கோரியுள்ளார்
உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதை அணைக்க பிரேசில் அரசு தீவிரம் காட்டி வருகிறது
இதற்கிடையே அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகள் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவியை பெறப் போவதில்லை என பிரேசில் தெரிவித்தது. இந்நிலையில், ஜி7 நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உதவியை இப்போது கேட்டுள்ளது.
தொடர்ந்து எரிந்து வரும் அமேசான் காடுகளில் தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உதவியை பிரேசில் அதிபர் கோரியுள்ளார். இதற்காக தனது மகன் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை வாஷிங்டன் அனுப்ப உள்ளதாகவும் பிரேசில் அதிபர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.
அமேசான் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரேசில் அரசு எடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியுள்ளதாக கூறியுள்ள போல்சனரோ, அதனால் ட்ரம்ப் அரசின் உதவியைக் கேட்க இருப்பதாகக் கூறினார். மாறாக, பிரேசிலை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் விமர்சித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள பிரேசில் அதிபர், மேக்ரான் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியுள்ளார்.