இந்தியா ரஷ்யா கூட்டாக உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் - கப்பல்கள் - விமானங்கள் அல்லது தரையிலிருந்து ஏவக்கூடியவை. இவற்றை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விற்பனை செய்வதற்கு கடந்த 2022ஆம் ஆண்டில் 375 மில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில் முதல் தொகுதி ஏவுகணைகள் பிலிப்பைன்ஸ் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானத்தின் மூலம் ஏவுகணைகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவை அந்நாட்டு கடற்படையால் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். அர்ஜெண்டினா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
தெற்கு சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான பகுதிகள் மீது சீனா உரிமை கொண்டாடிவரும் நிலையில் பிலிப்பைன்ஸுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பிரமோஸ் ஏவுகணைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.