உலகம்

சக்கர நாற்காலியில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்! ரசிகர்கள் அதிர்ச்சி

சக்கர நாற்காலியில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்! ரசிகர்கள் அதிர்ச்சி

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. துவக்கத்தில் இவை போலியாக இருக்கக்கூடும் என பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்த புகைப்படங்கள் உண்மை என்றும் இவை மியாமி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

ஏன் சக்கர நாற்காலியில் மைக் டைசன்?

சமீப நாட்களாக மைக் டைசன் முதுகு காயத்தால் ஏற்பட்ட வலியுடன் போராடி வருகிறார். நியூயார்க்கில் கையில் ஒரு குச்சி உதவியுடன் அவர் நடமாடியதும் இந்த வலியின் காரணமாகவே. முதுகில் அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காக தற்போது அவர் சக்கர் நாற்காலியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் அளவு தீவிரமானது அல்ல என்றும் வழக்கமாக ஒரு குத்துச்சண்டை வீரருக்கு ஏற்படும் தொழில் ரீதியான காயம் போன்றதுதான் இது என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் - டைசன்:

சமீபத்தில் போட்காஸ்ட் ஒன்றில் பேசிய மைக் டைசன் தாம் தமது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பியிருந்தார். “நாம் அனைவரும் நிச்சயமாக ஒரு நாள் இறந்துவிடுவோம். நான் கண்ணாடியில் பார்க்கும்போது, என் முகத்தில் அந்த சின்னஞ்சிறு புள்ளிகளைப் பார்க்கிறேன். நான் சொல்கிறேன், 'ஆஹா. அதாவது எனது காலாவதி தேதி நெருங்கி வருகிறது, இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிக்கிறேன்” என்று பேசினார் மைக் டைசன்.

56 வயதான குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தமது இறுதிக் காலம் குறித்து பேசிய சில நாட்களில் சக்கர நாற்காலியில் அவர் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குத்துச்சண்டை பிரியர்கள் மத்தியிலும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.