உலகம்

330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது !

jagadeesh

போட்ஸ்வானா நாட்டில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்ததற்கு, நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை பருகியதே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள போட்ஸ்வானா, உலகிலேயே அதிக யானைகளைக் கொண்ட நாடாகும். அங்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி யானைகள் மர்மமான முறையில் உயிரிழக்கத் தொடங்கின. இதுவரை சுமார் 330 யானைகள் இறந்துவிட்டன.

இத‌னால் அதிர்ச்சி அடைந்த போட்ஸ்வானா அரசு, யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்ட‌றியும் பணியில் வனஉயிரின மற்றும் தேசிய பூங்கா துறையை ஈடுபடுத்தியது. அவர்கள், உயிரிழந்த யானைகளின் உடல்களிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். நிலைமயை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், வனப்பகுதியின் மேலே விமானங்களில் சென்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், சயானோ எனப்படும் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்த நச்சுப்பொருள் கலந்த தண்ணீரைப் பருகியதால்தான் யானைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால் ‌நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரைப் பருகிய மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் யானைகள் மட்டும் உயிரிழந்தது எப்படி? என்கிற சந்தேகத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்று வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்கா துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.