உலகம்

கட்சிக்குள் எழும் கலகக்குரல்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி தப்புமா?

கட்சிக்குள் எழும் கலகக்குரல்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி தப்புமா?

ச. முத்துகிருஷ்ணன்

அண்மையில்தான் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு வெற்றி பெற்றார். ஒரு இக்கட்டை வெற்றிகரமாக கடந்து வந்த போரிஸ் ஜான்சனுக்கு குறுகிய காலத்திலேயே வேறோரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1. அரசு சரிவர நேர்வழியில் மிகக் கவனத்தோடு தீவிரமாக செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்...

2. அரசின் தலைமை தேசிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை...

இவை இரண்டும் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விலகிய இரு அமைச்சர்களின் பதவி விலகல் கடிதத்தில் இருந்த முக்கிய வரிகள்.

அண்மையில்தான் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு வெற்றி பெற்றார். ஒரு இக்கட்டை வெற்றிகரமாக கடந்து வந்த போரிஸ் ஜான்சனுக்கு குறுகிய காலத்திலேயே வேறோரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிஷி சுனக் (RISHI SUNAK) நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், சஜித் ஜாவித் (SAJID JAVID) சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளனர்.

கோவிட் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மற்றும் பொருளாதாரத்தை மீட்பதில் இருவரும் ஆற்றிய பணி அளப்பரியது என்கின்றனர் அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள். அப்படிப்பட்ட இருவரைத் தொடர்ந்து இளநிலை அமைச்சர்கள் வில் குயின்ஸ் (WILL QUINCE), ராபின் வாக்கர் (ROBIN WALKER), அலெக்ஸ் சாக் (ALEX CHALK) போன்றோரும் பதவி விலகியுள்ளனர்.

கிறிஸ் பின்ச்சர் (CHRIS PINCHER) துணை தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டதே இவர்கள் பதவி விலகக் காரணமாகக் கூறப்படுகிறது. கிறிஸ் பின்ச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரை அரசுப் பதவியில் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. போரிஸ் ஜான்சன் இது குறித்து மன்னிப்பும் கோரினார். இந்நிலையில்தான் 10 நிமிட இடைவெளியில் இரு மூத்த அமைச்சர்கள் பதவி விலகினர். தொடர்ந்து இளைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் பதவி விலகி வருகின்றனர்.

இவர்களின் பதவி விலகலால் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை என்கின்றனர் போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள். பதவி விலகியோரின் இடத்தில் புதியவர்களை நியமனம் செய்துள்ள போரி்ஸ் ஜான்சன் தனது அரசு தேவையான ஆதரவோடு இருப்பதாகக் கூறியுள்ளார். இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளதால், தற்போதைய அரசு கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சியினரின் வாதம். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சன் இம்முறை சொந்தக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இக்கட்டை எளிதில் சரிசெய்ய இயலாது என்பதே சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

- இலக்கியா