போயிங் எக்ஸ் தளம்
உலகம்

ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கிய போயிங் நிறுவனம்.. 17 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு!

விமானச் சேவை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல போயிங் கோ நிறுவனமும், தனது நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது.

Prakash J

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அனைத்தும் தத்தம் ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணி நீக்கம் செய்தன. இவைகளைத் தவிர இன்னும் சில முன்னணி நிறுவனங்களும் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், விமானச் சேவை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல போயிங் கோ நிறுவனமும், தனது நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜனவரியில் போயிங் விமானம் சந்தித்த விபத்துகள், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொடர்ந்து 7 வாரங்கள் நடந்த வேலைநிறுத்தம், பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட பல காரணிகளால் நிறுவனம், ஆட்களைக் குறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைனுக்கு எதிரான போர்.. அதிபர் புதினை விமர்சித்த சமையல் கலைஞருக்கு செர்பியாவில் நிகழ்ந்த சோகம்!

மேலும், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் அவர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆள்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதமே, போயிங் நிறுவனம் 10 சதவீத ஆள்குறைப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், மொத்த ஊழியர்களில் 17,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் நேற்றுமுதல் தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்படவிருக்கும் ஊழியர்களுக்கு ’பிங்க் சிலிப்’ எனப்படும் நோட்டீஸ் வழங்குவது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், மிகவும் முக்கியமான பணியிடங்களில் ஆள்களைக் குறைத்துவிட்டால், அதுவே, நிறுவனம் மீண்டும் எழ முடியாமல் போவதற்குக் காரணமாகிவிடலாம் என்பதால், மிகுந்த கவனத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘ட்ரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்கணுமா...?’ - 4 ஆண்டு கடல் பயணத்தை ஏற்பாடு செய்த சொகுசுக் கப்பல்!