Fernando Perez Algaba Twitter
உலகம்

துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட உடலின் பாகங்கள்; கிரிப்டோ பில்லியனர் கொடூர கொலை!

அர்ஜென்டினாவை சேர்ந்த கிரிப்டோகரன்சி கோடீஸ்வரர் பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Justindurai S

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தவர் ஆவார். கிரிப்டோகரன்சி மூலம் கோடீஸ்வரராக உயர்ந்த இவர் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தி வந்தார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் தனது ஆடம்பரமான வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் பிரபலமானவை.

பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் அவரை காணவில்லை என்று குடியிருப்பு உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெர்னாண்டோ பெரெஸ் அல்காபாவை போலீசார் தேடிவந்தனர்.

இதனிடையே அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள நீரோடை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ்க்குள் ஆணின் உடல் துண்டு துண்டாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்த அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Fernando Perez Algaba

கைரேகைகள் மற்றும் உடலில் பச்சை குத்தியிருந்த அடையாளத்தை வைத்து அந்த உடல், காணமால்போனதாக தேடப்பட்டு வரும் பெர்னாண்டோவின் உடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் பெர்னாண்டோவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படுவதற்கு முன்பு அவர் மூன்று முறை துப்பாக்கியதால் சுடப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கைகள், கால்களை துண்டித்து, அதை சூட்கேஸ்க்குள் திணித்து வீசியெறிந்து இருப்பதால் இச்சம்பவத்தில், கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினை காரணமாக பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.