உலகம்

கடலுக்கு அடியில் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரரின் உடல்: ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

கடலுக்கு அடியில் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரரின் உடல்: ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

webteam

விமானத்துடன் காணாமல் போன கால்பந்தாட்ட வீரர் சாலாவின் உடல் கடலுக்கு அடியில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா சென்ற விமானம் மாயமானது. சனல் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும், இதனையடுத்து விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. 

திடீரென்று விமானம் மாயமானது எப்படி என்பது தெரியாமல் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழம்பினர். காணாமல் போன சாலாவிற்காக சக வீரர்களும், அவரது ரசிகர்களும் உலகெங்கிலும் பிரார்த்தனை செய்தனர். சாலா நிச்சயம் உயிருடன் திரும்பி வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறை கடலுக்கு அடியில் உடைந்த விமான பாகங்களையும், சாலாவின் உடலையும் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கண்டுபிடிக்கப்பட்ட சாலாவின் உடல் தெற்கு இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தன்னுடைய இணைய பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி, ''சாலாவின் குடும்பத்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் எங்களுடைய உணர்வுப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். வீரர் சாலாவும், விமானி டேவிட்டும் என்றுமே எங்கள் நினைவில் இருப்பார்கள்'' என்று உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளது.

வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் தான் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் ஆனாலும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி, சாலாவை இந்திய ரூபாய் மதிப்பில் 138 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இதனையடுத்து இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம் மூலம் சாலா, பிரான்ஸில் இருந்து வேல்ஸ் நாட்டிற்கு திரும்பியபோது விபத்தில் சிக்கினார்.