உலகம்

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

webteam

இலங்கையில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். மீண்டும் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந் துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

 இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில் அம்பாறையில் உள்ள கல்முனை பகுதியில், தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்து ஏராளமான வெடிபொருட்களும் டெட்டனேட்டர்களும் ஐஎஸ் பேனர்களும், உடைகளும் மீட்கப்பட்டன.

இதையடுத்து அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில்  ஒரு வீட்டில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஆறு குழந்தைகள்  உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.  இவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் இருக்க தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதில் 4 பேர் தற்கொலை படையினர் எனத் தெரிய வந்துள்ளது.