காசாவில் ஹமாஸ் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் முப்படைகள் மூலம் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், எகிப்து எல்லை திறந்துவிடப்பட்டு ராஃபா நகர் வழியாக காசா மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
காசா-இஸ்ரேல் இடையேயான போரில் இருதரப்பிலும் சேர்த்து 4,000க்கும் அதிமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப்படையினருக்கும் இடையே 11வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது. இதுவரை காசாவில் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக என ஐ.நா வேதனை தெரிவித்துள்ளளது. காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான ஒசாமா அல் மசினி உயிரிழந்துள்ளளார்.
ஒசாமா அல் மசினியின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளளது. ஹமாஸ் அமைப்பின் அரசியல் குழு தலைவரான ஒசாமா அல் மசினி, கடந்த காலத்தில் ஹமாஸ் கல்வி அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஹமாஸ் உடனான சண்டை நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்கிறார். இதன் காரணமாக தரைவழி தாக்குதலை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக்கூடாது என பைடன் கூறிய நிலையில், அவரின் இஸ்ரேல் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.