உலகம்

பெநாசிர் பூட்டோ கொலையின்போது அவர் கட்சியினர் எங்கே சென்றனர்?: நீதிமன்றம் கேள்வி

webteam

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெநாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டபோது, அவரது கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நிகழ்விடத்தில் இருந்து காணாமல்போனது ஏன் என அந்நாட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனிதவெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, பெநாசிருக்குப் பின்னால் காரில் வந்த தலைவர்கள் ஆசிப் அலி சர்தாரியைச் சந்திக்கச் சென்றது குறித்தும் நீதிபதிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சர்தாரியின் வீட்டில் பெநாசிரின் கார் வந்து சேருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவதற்காக அங்கு விரைந்து சென்றதாக, அவரது கட்சியினர் கூறிய கருத்துகளையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. பெநாசிர் பூட்டோ படுகொலை வழக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையும், உள்நாட்டு தீவிரவாத தடுப்புப் பிரிவும் விசாரணை நடத்தியிருக்கின்றன.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் தேர்தல் பரப்புரையின்போது பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெநாசிர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுடன், மனிதவெடிகுண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதில் பெநாசிர் உள்பட மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர். 

அதிகாரமும் செல்வாக்கும் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வாழ்நாள் முழுவதும் கரடு முரடான பாதைகளையே கடந்து வந்தவர் பெநாசிர் பூட்டோ. இஸ்லாமிய நாடு ஒன்றின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிரதமராக இருந்தபோது குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரே தலைவரும் இவர்தான்.