பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்கியவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெநாசிர் பூட்டோ. அவரது படுகொலை அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளைக் கொண்டிருக்கிறது.
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் பெநாசிர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுடன், மனிதவெடிகுண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதில் பெநாசிர் பூட்டோ உள்பட மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர். இரு மாதங்களுக்கு முன்பு கராச்சியில் நடந்த இதேபோன்ற தாக்குதலில் தப்பிய பெநாசிர் பூட்டோவுக்கு இந்த முறை அதிஷ்டம் இல்லாமல் போனது.
அதிகாரமும் செல்வாக்கும் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வாழ்நாள் முழுவதும் கரடு முரடான பாதைகளையே கடந்து வந்தவர் பெநாசிர் பூட்டோ. இஸ்லாமிய நாடு ஒன்றின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிரதமராக இருந்தபோது குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரே தலைவரும் இவர்தான்.
ஜியா உல் ஹக் அரசால், தந்தை சூல்ஃபிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, சிறையிலும் வீட்டுக் காவலிலும் வாடினார் பெநாசிர் பூட்டோ. காற்றோட்டமும், அடிப்படை வசதிகளும் இல்லாத லர்க்கானா மத்தியச் சிறையில் அவரது சகோதரரும் தாயும் உடன் இருந்தனர். தந்தையை இழந்து சிறையில் வாடிய அந்தக் கால கட்டம் பேநாசிரின் வாழ்க்கையில் மிகவும் கொடுமையானவை. கோடை காலத்தில் உடல் வெந்து போகும் அளவுக்கு வெப்பம் வாட்டியதாகவும், நீரும் உணவும் இல்லாமல் தவித்ததாகவும் தனது சிறை வாழ்க்கை பற்றிய சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1982 ஆம் ஆண்டு காவலில் இருந்தபோதே, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு 29 வயதே நிறைவடைந்திருந்தது. அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதுடன் எதையும் துணிச்சலாக அணுகக் கூடியவர் என்ற பண்பும் அவருக்கு பதவி கிடைப்பதற்கான காரணங்களாக அமைந்தன. விமான விபத்தில் ஜியா உல் ஹக் கொல்லப்பட்ட பிறகு இரண்டு முறை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் பேநாசிர். அவற்றில் ஒரு முறைகூட முழுமையாகப் பதவிக் காலத்தை நிறைவு செய்ய இயவில்லை.
அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் வளர்க்கப்பட்டதாகக் கருதப்படும் தாலிபன் இயக்கத்தின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவர் பெநாசிர் பூட்டோ. இந்தப் பகைமையே பின்னாளில் அவரது உயிரைப் பறித்தது.
8 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு தாயகம் திரும்பிய பெநாசிர் பூட்டோ, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். அது மாலை நேரம். மீண்டும் ஒரு முறை அவர் பிரதமர் ஆகப்போவது நிச்சயம் என்று ஊடகங்கள் கூறிக் கொண்டிருந்தன. அப்போதுதான் பெநாசிர் பூட்டோவின் காருக்கு அருகே பெரும் சத்தத்தில் குண்டு வெடித்தது. அந்தப் பேரொலிக்கு நடுவே ஒருவர், ஆதரவாளர்களை நோக்கிக் கையசைத்துக் கொண்டிருந்த பெநாசிர் பூட்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. மயங்கி விழுந்த பெநாசிர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தால் பாகிஸ்தான் முழுவதுமே வன்முறைக் காடானது.
பெநாசிர் பூட்டோவின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து முரண்பாடான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. வெடிகுண்டு சிதறல் தாக்கியதாகவும், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாகவும் முதலில் கூறப்பட்டது. வெடிகுண்டு சத்தம் கேட்டதும் குனிந்து கொள்ள முற்பட்டபோது, காரின் மேற்புறத் திறப்பில் தலை மோதியதால் காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் பெநாசிர் பூட்டோவை காப்பாற்றியிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரியவந்தது.
படுகொலைக்கு பொறுப்பேற்ற அல்-கய்தா அமைப்பு, முஜாகிதீன்களைத் தோற்கடிக்க முயன்ற அமெரிக்கக் கைக்கூலி அழித்தொழிக்கப்பட்டார் என்று எக்காளமிட்டது. ஆனால் பெநாசிர் பூட்டோ படுகொலை, பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் திரும்புவதற்கும், நாட்டில் ஜனநாயகம் வலுப்பெறுவதற்கும் அடித்தளம் அமைத்தது.