பெல்ஜியம் நீதிமன்றத்தில் சரணடைந்த கேட்டலோனியா முன்னாள் தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்ட் உள்ளிட்ட ஐந்துபேர் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
கேட்டலோனியாவை தனி நாடாக பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதை அடுத்து, அங்கு நேரடியான ஆட்சியை ஸ்பெயின் அரசு அமல்படுத்தியது. அத்துடன் பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கேட்டலோனியா முன்னாள் தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்டுக்கு எதிராக, ஸ்பெயின் நீதிமன்றம் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து பெல்ஜியம் நீதிமன்றத்தில் கார்லஸும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அவரது நான்கு அமைச்சர்களும் சரண் அடைந்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மாட்ரிட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் நகரின் பிளாசா டெல் சோல் என்ற இடத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை அவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். அப்போது ஸ்பெயின் அரசுக்கு எதிராகவும் கைது செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள விடுவிக்கக் கோரியும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் கேட்டலோனியா தலைவர்கள் மீதான வழக்கை விசாரித்த பெல்ஜியம் நீதிமன்றம், 15 நாட்களுக்குப் பின் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் அவர்கள் ஐந்து பேர் மீதும் தேசதுரோகம், புரட்சியில் ஈடுபட்டது, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது, நம்பிக்கை துரோகம் செய்தது என அடுக்கடுக்கான வழக்குகளை ஸ்பெயின் அரசு பதிவு செய்துள்ளது.