பார்க் ஏர் முகநூல்
உலகம்

நாய்களுக்காக பிரத்யேக விமானம்... ஒரு பயணத்துக்கு மட்டும் இத்தனை லட்சம் கொடுக்கணுமா?

ஜெனிட்டா ரோஸ்லின்

விமான பயணம் என்றாலே நம் எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். ஆனால் இன்னும்கூட அது நம்மில் பலருக்கும் சாத்தியப்படாமல் போயுள்ளது. அதேநேரம், தனி விமானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு விமான பயணம் சிலருக்கு எளிதானதாக மாறிவிட்டது.

‘எது எப்படியோ, நான் என்னை அப்டேட் பண்ணிக்குவேன்’ என நாளுக்கு நாள் விமானத்தின் வசதிகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இதில் சமீபத்தில் நாய்கள் பயணம் செய்வதற்கென்றே பிரத்யேக விமானம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவு என்றே கூறலாம். இந்த ஆசை நாய்களுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா என்ன? அப்படி இருந்தால் அதை எப்படி நிறைவேற்றுவது? இதை யோசித்துதான் நாய்களுக்கான பிரத்யேக விமான சேவையை வழங்கியுள்ளது பார்க் ஏர் என்ற நிறுவனம்.

இதன்படி, உலகிலேயே முதன்முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்யும் வகையில் சகல வசதிகளுடன் பிரத்யேகமான விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் விமானம் அமெரிக்காவில் நியூயார்க்கின் வெஸ்ட் செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

இந்த பார்க் நிறுவனம் என்பது நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் நிறுவனம். இந்நிலையில், இது ஜெட் சார்ட்ர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் என்ற நாய்களுக்காக பிரத்யேக விமான சேவையை துவங்கியுள்ளது.

நாய்களுக்கானது என்று கூறப்பட்டாலும், இவைகளுடன் நாய்களின் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். நாய்களுக்கென சவுகரிய படுக்கைகள், இருக்கை வசதிகள், டயப்பர்களும் விமானத்தில் வழங்கப்படுகிறது.

உள்நாட்டிற்குள் இதில் பயணிக்க 6,000 டாலர்கள் கொடுத்து டிக்கெட் பெற வேண்டுமாம். இன்றைய இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சம் வரும். இதுவே வெளிநாட்டு பயணத்திற்கு 8000 டாலர்களாம். இது இந்திய மதிப்பில், ரூ. 6 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானத்தில் 15 நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் பயணம் செய்ய முடியும். ஆனால், போதுமான வசதியை முடிவு செய்ய ஒரு விமானத்திற்கு 10 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையின், இந்நிறுவனத்தின் இணை இயக்குநர் மற்றும் CEO, “நாய்களுக்கு இது முதல் தர அனுபவமாக இருக்கும். அவற்றுக்கு தேவையான எல்லா வசதிகளும் இதில் செய்து கொடுக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் மூலம் அவற்றின் கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க முயற்சி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.