வங்கதேச யூடியூபர் எக்ஸ் தளம்
உலகம்

‘பாஸ்போர்ட், விசா வேண்டாம்; இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைவது எப்படி?’ யூடியூபரின் சர்ச்சை வீடியோ!

Prakash J

இன்றைய தேதியில் எந்தச் செய்திகளையாவது பற்றி அறிய வேண்டுமா அல்லது காண வேண்டுமா, யூ-டியூப் பக்கம் சென்றால் போதும்... அனைத்தும் இணையத்தை மொய்த்து நிற்கும். அதிலும் ஆர்வக்கோளாறில் சற்றும் பின்விளைவுகளைப் பற்றி யோகிக்காமல் சர்ச்சைக்குரிய கன்டென்டுகள், தனிமனித தாக்குதல் என அனைத்தையும் யூடியூபில் பதிவேற்றி சிலர் வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேசத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், இந்தியாவுக்குள் விசா, பாஸ்போர்ட் இன்றி போலியாக நுழைவது எப்படி என்ற வீடியோயைப் பதிவேற்றி சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.

அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவரான அவர், DH Travelling Info என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதன்மூலம் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில்தான், இதுபோன்ற சர்ச்சையை சந்தித்துள்ளார். அந்த வீடியோவில், வங்கதேச சில்ஹெட் பிரிவில் அமைந்துள்ள சுனம்கஞ்ச் மாவட்டத்தில் நிற்கிறார். அந்தப் பகுதிதான் இந்தியாவுக்கான எல்லையாகவும் உள்ளது.

இதையடுத்து அவர் வீடியோவில் இந்தியாவுக்கு செல்லும் சாலையை காண்பிக்கிறார். மேலும், இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களையும், இந்தியாவுக்குள் நுழையும் சுரங்கப் பாதையையும் காண்பித்து, “இந்த வழியை முன்பு பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வழியில் இந்தியா செல்ல பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் தேவையில்லை” என்று குறிப்பிடுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு இறுதியில், “எந்த ஒரு நாட்டுக்குள்ளும் சட்டவிரோதமாக நுழையக்கூடாது. வங்கதேச நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது” என்று கூறுகிறார். இது, சற்று பழைய வீடியோ எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மினிமம் பேலன்ஸ் இல்லை... 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல்.. ராகுல் காந்தி கண்டனம்!

என்றாலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பார்வைகளையும், 7,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து பல்வேறு பதிவுகளும் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பயனர் ஒருவர், “எல்லை பாதுகாப்புப் படை தூங்கிக் கொண்டிருக்கிறதா? யூடியூபருக்கு தெரிந்தால் உலகத்துக்கே தெரிந்தது மாதிரிதான். எல்லையில் நம் பாதுகாப்புப் படை என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சில பயனர்கள், “ஆம், எந்த ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் வரலாம். அவர்கள் வந்தவுடன் ஆதார் கார்டு, பான் கார்டுகளை காசுக்காக விற்பார்கள். ஏன் அவர்களுக்கு வாக்குரிமைகூட கிடைத்துவிடும்! இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு எல்லையை பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இன்னொருவரோ, ”அவர் அதைக் காட்டியது நல்லது, இப்போது நாம் இந்த நிலைகளை வலுப்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாரீஸ் ஒலிம்பிக்ஸ் | ரயில் சேவை பாதிப்பு.. தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதம்.. காத்திருக்கும் புயல்?