வங்கதேச வன்முறை எக்ஸ் தளம்
உலகம்

வன்முறையில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்.. நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்.. பின்னணி என்ன?

ஹஸினா பதவியேற்ற நாள்முதல் அமைதியாக இருந்த வங்கதேச பூமி, கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெறியாட்டத்தில் கலவர பூமியாக மாறியுள்ளது. அதற்குக் காரணம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான்.

Prakash J

எல்லா நாடுகளும் தன் வரைபட எல்லைகளை பிற நாட்டு எல்லைகளுடன் குறித்துவைப்பதைப் போலவே, வங்கதேசமும் தன் நாட்டு எல்லைகளை இந்தியாவின் வடமாநிலங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாகத் திகழும் வங்கதேசத்தில், தற்போது அவாமி லீக் கட்சி அரியணையில் உள்ளது. அதன் பிரதமராக மீண்டும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஷேக் ஹஸினா பதவியில் உள்ளார்.

ஹஸினா பதவியேற்ற நாள்முதல் அமைதியாக இருந்த வங்கதேச பூமி, கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெறியாட்டத்தில் கலவர பூமியாக மாறியுள்ளது. அதற்குக் காரணம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான். 1971இல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனால் பிறருக்குப் பாதிப்பு ஏற்பட்டதால், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018இல் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அந்த இடஒதுக்கீடு அப்போது ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், இதனை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிக்க: தொலைதூர காதல்| புது மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீன இளைஞர்

இந்த வழக்கின் விசாரணை முடிந்து, ’’தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தற்போது ஆட்சியில் இருக்கும் அவாமி லீக் கட்சியும், இதைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் வங்கதேசத்தில் திரும்பும் திசையெல்லாம் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. இவர்களை, ஆளுங்கட்சியின் மாணவர் அமைப்பான பங்களாதேஷ் சத்ரா லீக் அமைப்பினர், தாக்கியதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தை முடக்கும்விதமாக, அவர்கள் தாக்குதல் நடத்திவருவதால், வங்கதேச வீதிகள் வன்முறைக் களமாகியுள்ளன.

தலைநகர் டாக்கா மட்டுமல்லாது, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு நகரங்களுமே வன்முறைகளால் வதைபட்டு வருகின்றன. இதற்கிடையே, “வீட்டையும் குடும்பத்தையும் மறந்து நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் பிள்ளைகளை அரசு ஆதரிப்பதும் கௌரவிப்பதும் அவசியம்” என பிரதமர் ஷேக் ஹஸினா பேசியிருந்தது, எரியும் வன்முறைக்கு மேலும் நெய்விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தொடர்ந்து தடுமாற்றம்| மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற ஜோ பைடன்!

இந்த தாக்குதலில் இதுவரை 105 பேர் பலியாகி இருப்பதாகவும், 2,500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் சுமார் 15,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 8,500 பேர் மாணவர்கள் ஆவர்.

இந்நிலையில், அங்கு தற்போது நிலவிவரும் கலவர சூழல் காரணமாக அங்குள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்ப இந்திய தூதரகத்தின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தியாவிற்கு வருவதற்கான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சாலை மார்க்கமாக 778 மாணவர்களும், விமானங்கள் மூலம் 200 மாணவர்களும் இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். வன்முறைக்கு இடமளிக்கா வகையில் அரசும் செயல்பட வேண்டும் என்பதே பலரின் குரலாக உள்ளது.

இதையும் படிக்க: சானியா மிர்சாவை திருமணம் செய்யப் போகிறேனா? முதல்முறையாக மவுனம் கலைத்த முகம்மது ஷமி!