முகம்மது யூனுஸ் எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | நாடு திரும்பிய முகம்மது யூனுஸ்.. பதவியேற்ற இடைக்கால அரசு!

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்றும், விரைவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் தெரிவித்திருந்தது. மேலும், வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு முகம்மது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: “அவர் மீதும் தவறு இருக்கிறது”- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து சாய்னா நேவால்

‘தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முகம்மது யூனிஸ் நாடு திரும்பியதும், இடைக்கால அரசு இவ்வார இறுதிக்குள் பதவியேற்கும்’ என சில தினங்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற நிகழ்வில் நோபல் பரிசுபெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு இன்று பதவியேற்றுள்ளது. இடைக்கால அரசின் ஆலோசனைக் குழுவில் முகமது யூனுஸ் உடன் வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர், சுதந்திரப் போராட்ட வீரர் ஃபரூக்-இ-ஆஸாம் உள்ளிட்ட 17 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.