அதிரடியான அரசியல் மாற்றங்களால் வங்கதேசம் முழுவதுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கதேசத்தில் தற்போது ராணுவ ஆட்சி நடைப்பெற்று வருகிறது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மற்றும் உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்றும், விரைவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு முகம்மது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முகம்மது யூனுஸ் வறுமையில் வாடுபவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனான வழங்கும் கிராமின் வங்கி என்ற பொருளாதார சித்தாந்தத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முகம்மது யூனிஸ் நாடு திரும்பியதும், இடைக்கால அரசு இவ்வார இறுதிக்குள் பதவியேற்கும் என கூறப்படுகிறது. முகம்மது யூனுசுக்கு ஆதரவாக மேலும் சிலர் இடைக்கால அரசில் ராணுவத்தால் நியமிக்கப்படவுள்ளனர். இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா இங்கிலாந்து செல்லவிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவருக்கு தஞ்சம் அளிக்க முடியாது என இங்கிலாந்து சூசகமாக தெரிவித்து விட்டது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, வங்கதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற வன்முறை குறித்து ஐநா தலைமையில் விசாரணை நடைபெறவேண்டும் என கூறியிருந்தார். இங்கிலாந்து விதிகளின் படி நாட்டிற்குள் இல்லாத ஒருவர் தஞ்சம் கோரமுடியாது. ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாகவே பரிசீலிக்கப்படும். இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகம், பெலாரஸ், சவுதி அரேபிய, பின்லாந்து போன்ற நாடுகளை ஷேக் ஹசீனா நாடவுள்ளதாக தெரிகிறது.
ஹசீனாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பின்லாந்திலும் இருப்பதால் அவர் அந்த நாட்டுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. ஹசீனாவின் பயணதிட்டம் தெளிவில்லாத நிலையில் இருப்பதால் அவர் அடுத்த ஓரிரு நாட்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.