ஷேக் ஹசினா எக்ஸ் தளம்
உலகம்

ஷேக் ஹசீனா எங்கே? இணையத்தில் தேடல் அதிகரிப்பு.. வங்கதேச இடைக்கால அரசு சொல்வது என்ன?

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

ஷேக் ஹசினா

இந்த நிலையில் வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் தற்போது எங்கு உள்ளார் என்ற கேள்வி திடீரென சமூக வலைதளங்களில் எழத்தொடங்கியுள்ளன. ஷேக் ஹசீனா, இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் தஞ்சமடைந்து இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வங்கதேச வெளியுறவுத்துறை அதிகாரி ஹூசைனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார் என்பதை எங்களால் உறுதிசெய்ய முடியவில்லை. ஷேக் ஹசீனாவின் இருப்பிடம் குறித்து டெல்லியிடமும், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் விசாரித்தோம். ஆனால், இதுவரை யாரிடம் இருந்தும் அதிகாரப்பூர்வ பதில் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கலாம் என்றும் தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், இதை உறுதி செய்ய எங்களால் முடியவில்லை” என்றார்.

இதையும் படிக்க: ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?

இதனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. முன்னதாக, அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்குச் செல்ல இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 5 முதல் ஹசீனா பொதுவெளியில் காணப்படவில்லை. ஆகஸ்ட் 13 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது மகன் மூலம் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து ஷேக் ஹசீனாவின் இருப்பிடத்தை பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தீவிரமாய் தேடி வருகிறது.

ஷேக் ஹசீனா

காரணம் அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர்மீது மட்டும் 170 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனா நீதிமன்றத்தால் நாடினால், அவரை நாடு கடத்துவோம் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் கூறியுள்ளது.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!