வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

துர்கா பூஜை |”ஆதாரமற்றவை” இந்துக்களின் பாதுகாப்பு குறித்த கவலை.. இந்தியாவுக்கு வங்கதேச அரசு பதில்

Prakash J

அண்டை மாநிலமான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு தொடர்பாக, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. இது, வன்முறையாக மாறியது. இதையடுத்து, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. எனினும், அங்கு தொடர்ந்து போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின்போது இந்துக்களும், இந்துக் கோயில்களும் தாக்கப்பட்டனர். இதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, 35க்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி உள்ளன; 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைதாகி உள்ளனர். டாக்கா அருகே உள்ள சத்தோகிராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலில் நுழைந்த ஏழு பேர், இஸ்லாமிய பாடல்களை பாடினர். இதனால், அங்கு திரண்டிருந்த இந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, டாக்காவில் உள்ள டாட்டி பஜார் என்ற இடத்தில், துர்கா பூஜை பந்தல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து நம் வெளியுறவுத் துறை கண்டன அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக, ‘இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதையும், அவர்கள் தங்கள் பண்டிகைகளை அச்சமின்றி கொண்டாடுவதையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: ”லிஸ்டில் இவர் பெயரும் இருக்கு”| பாபா சித்திக் படுகொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

இந்த நிலையில், வங்கதேச இந்துக்களை சமாதனப்படுத்தும் வகையில் முகமது யூனுஸ், ’அனைத்து குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலான வங்கதேசத்தை கட்டமைக்க அரசு விருமபுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். துர்கா பூஜையின் போது, மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு படையினர் கடுமையாக உழைத்தனர். இந்த விவகாரத்தில் கூட்டுத் தோல்வி ஏற்பட்டு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்துக்களுக்கான பாதுகாப்புக் கவலைகள் குறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கைக்கு வங்கதேச அரசு பதிலளித்துள்ளது. அது, “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் வலியுறுத்தல்கள் தேவையற்றவை என்று அரசாங்கம் கண்டறிந்துள்ளது. வங்கதேச மக்களின் நீண்டகால மதச்சார்பற்ற மற்றும் உள்ளடக்கிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்துவருவதாக இடைக்கால அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறது” எனப் பதிலளித்துள்ளது.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!