வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

“மதச்சார்பின்மை என்ற சொல் கூடாது” - அரசியலமைப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சர்ச்சையில் வங்கதேசம்!

“ ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று வங்கதேச அட்டர்னி ஜெனரல் அசாதுஸ்மான் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர், அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என்றாலும், அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் பேசுபொருளானது.

முகம்மது யூனுஸ்

இந்த நிலையில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வங்கதேச அட்டர்னி ஜெனரல் அசாதுஸ்மான் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டுச் சட்டத்தின் 15வது திருத்தம் குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அட்டர்னி ஜெனரல் எம்.டி.அசாதுஸ்ஸாமான் இந்த வாதங்களை முன்வைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டில் வங்கதேச அரசியலமைப்பில் 15வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேசியவாதம், சோசலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை நான்கும் அடிப்படைக் கொள்கைகளாகக் குறிப்பிடப்பட்டது.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!

இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கிலேயே மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "வங்கதேசத்தில் 90% இஸ்லாமியர்கள் இருப்பதால் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும். அனைத்து மதங்களின் நடைமுறையிலும் சம உரிமை மற்றும் சமத்துவத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று 2Aவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிரிவு 9 என்பது 'வங்காள தேசியவாதம்' குறித்துப் பேசுகிறது. இவை இரண்டும் முரண்பாடானது.

ஜனநாயகத்தைக் குலைக்கக்கூடிய திருத்தங்கள் அல்லது தடைகளைச் செய்யக்கூடாது என்று பிரிவுகள் 7A மற்றும் 7B கூறுகின்றன. இது நாட்டில் தேவையான சீர்திருத்தங்கள் செய்வதைத் தடுக்கிறது. ஜனநாயகத்தை கேள்விகுறியாக்குகிறது. மறைமுகமாகச் சர்வாதிகாரத்தைக் கொண்டு வரவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், ஷேக் முஜிபுர் ரஹ்மானை தேசத்தின் தந்தை என்று அங்கீகரித்தது உட்பட பல திருத்தங்கள், வங்கதேசத்தைப் பிளவுபடுத்துவதாகவும், பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் இருந்ததாகத் தெரிவித்தார். ஷேக் முஜிபுரின் பங்களிப்புகளை மதிப்பது இன்றியமையாதது என்ற போதிலும் அதைச் சட்டத்தால் அமல்படுத்துவது பிரிவினையை உருவாக்குகிறது என அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வாதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் என்னதான் இஸ்லாமியர்கள் மக்கள்தொகைதான் அதிகம் என்றாலும் அங்கு கிறிஸ்தவர், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் உள்ளனர். இதனால், அது இன்றுவரை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கிய போயிங் நிறுவனம்.. 17 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு!